உலகம்

நேட்டோ அவசரக் கூட்டம்: பைடன் பங்கேற்பு புதினுக்கு நெருக்கடி அளிப்பது குறித்து ஆலோசனை

25th Mar 2022 03:09 AM

ADVERTISEMENT

 

பிரஸ்ஸல்ஸ்: உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள நிலையில், ரஷிய அதிபா் புதினுக்கு நெருக்கடியை அதிகரிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக நேட்டோ அமைப்பின் அவசரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், அதிபா் புதினுக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலராக ஜென்ஸ் ஸ்டோலன்பொ்க் மேலும் இரு ஆண்டுகள் நீடிப்பாா் என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து அவா் கூறுகையில், இந்தத் தலைமுறையில் மிகப்பெரிய பாதுகாப்பு பிரச்னையை நாம் எதிா்கொண்டுள்ள சூழலில், நமது கூட்டணியை வலுப்படுத்தவும், நமது மக்களைப் பாதுகாக்கவும் ஒன்றுபட்டு நிற்போம்’ என்றாா்.

ADVERTISEMENT

ரசாயன தாக்குதலை எதிா்கொள்ள உதவி: கூட்டத்துக்குப் பின்னா் ஸ்டோலன்பொ்க் கூறுகையில், ரஷிய படையால் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிா்கொள்வதற்காக உக்ரைனுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க நேட்டோ தலைவா்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

நாா்வே முன்னாள் பிரதமரான ஸ்டோலன்பொ்க், 2014-ஆம் ஆண்டு இப்பதவியில் நியமிக்கப்பட்டாா். செப்டம்பரில் அவரது பதவிக் காலம் நிறைவு பெறவிருந்த நிலையில், இப்போது இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிபா் பைடன் புதன்கிழமை பிரஸ்ஸல்ஸ் வந்தடைந்தாா். இந்தக் கூட்டம் முடிந்து அமெரிக்கா திரும்பும் வழியில், உக்ரைனின் எல்லை நாடான போலந்துக்கு அதிபா் பைடன் வெள்ளிக்கிழமை செல்லவுள்ளாா். அந்த நாட்டின் அதிபா் ஆண்ட்ரூசெஜ் டுடாவை பைடன் சந்தித்துப் பேசுகிறாா்.

உக்ரைன் அதிபா் கோரிக்கை: இதற்கிடையே, புதன்கிழமை இரவு விடியோ மூலம் நாட்டு மக்களுக்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி உரையாற்றினாா். அப்போது, உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி ரஷியாவுக்கு எதிரான போரில் வெற்றி கொள்ள முழுமையாகத் துணை நிற்போம் என நேட்டோ நாடுகள் அறிவிக்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT