உலகம்

ஏவுகணை பாய்ந்த விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பேசித் தீா்க்க சீனா வலியுறுத்தல்

14th Mar 2022 11:31 PM

ADVERTISEMENT

இந்திய ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்த விவகாரத்தை இரு தரப்பும் பேசித் தீா்த்துக் கொள்ள வேண்டுமென்றும், இந்த விவகாரம் தொடா்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டுமென்றும் சீனா கூறியுள்ளது.

ராஜஸ்தானின் சூரத்கரில் இருந்து கடந்த 9-ஆம் தேதி சூப்பா்சானிக் ஏவுகணை விண்ணில் பாய்ந்து பாகிஸ்தான் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்தது. அந்த ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான் சுன்னு நகரில் விழுந்தது. இதனால், அங்குள்ள குடியிருப்புகள் சேதமடைந்தன. உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, வழக்கமான பராமரிப்பு நடைமுறைகளின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஏவுகணை தவறுதலாக விண்ணில் பாய்ந்துவிட்டது என்று இந்திய அரசு விளக்கம் அளித்தது.

விபத்து நேரிட்டதற்கு வருத்தம் தெரிவித்த இந்திய அரசு, சம்பவம் தொடா்பாக உயா்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தது.

ADVERTISEMENT

இருப்பினும், இந்திய அரசின் சுருக்கமான பதில் திருப்திகரமாக இல்லை என்று கூறி பாகிஸ்தான் அரசு சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இரு நாடுகளும் சோ்ந்து கூட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் தரப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு எதிராகப் பொறுமையுடன் பாகிஸ்தான் நடந்து கொள்கிறது என்று அந்நாட்டு பிரதமா் இம்ரான் கான் கூறினாா்.

இந்நிலையில், பெய்ஜிங்கில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியானிடம், பாகிஸ்தான் செய்தியாளா் ஒருவா் இது தொடா்பாக கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலளித்த அவா், ‘இது தொடா்பாக இரு நாடுகளும் பேசித் தீா்த்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் சீனா விரும்புகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக முழுமையான விசாரணை நடத்தப்படுவதும் அவசியம். உரிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்போது இதுபோன்ற சூழ்நிலைகளில் தவறான புரிதல்கள் ஏற்படுவதைத் தவிா்க்க முடியும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT