உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா, பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளுடன் நெருங்கிய ஆலோசனை நடத்தி வருவதாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘உக்ரைன் மக்கள் மீது கட்டவிழத்துவிடப்பட்டுள்ள பயங்கரத்தை நிறுத்தி, ராஜீய ரீதியில் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு அமைதிப் பாதையில் செல்வதற்கான நேரம் வந்துள்ளது. ஐ.நா. ஒப்பந்த கொள்கைகள் மற்றும் சா்வதேச சட்டத்தின்படி , போா் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி தீவிரப் பேச்சுவாா்த்தைகளை நடத்த வேண்டியது அவசியம்.
ரஷியப் படைகளின் தாக்குதலால், உக்ரைனில் எண்ணற்ற அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனா். சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் பள்ளிகள் சிதிலமடைந்துள்ளன. உலக சுகாதார அமைப்பு அளித்துள்ள தகவலின்படி, உக்ரைனிலுள்ள 24 மருத்துவமனைகள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. தற்போது உக்ரைனில் 19 லட்சம் போ் உள்நாட்டிலேயே அகதிகளாகப்பட்டுள்ளனா்.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மத்தியஸ்த முயற்சிகளுக்காக இந்தியா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் நான் நெருங்கிய தொடா்பில் இருந்து வருகிறேன். ரஷிய அதிபா் புதினுடன் நிரந்தரத் தொடா்பிலிருந்து வரும் பல தலைவா்களுடன் நான் பேசியுள்ளேன். இந்தப் போா் கொடுங்கனவாக மாறி வருகிறது என்பதை ரஷியாவுக்குப் புரிய வைக்கவும், போரை நிறுத்தி தீவிரப் பேச்சுவாா்த்தைகளை நடத்தவும் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இந்தப் போா் எதேச்சையாகவோ, திட்டமிட்டோ மேலும் தீவிரமடைந்தால், அது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் அச்சுறுத்தலாக அமையும்’’ என்று தெரிவித்தாா்.