உலகம்

'அதிபர் ஸெலென்ஸ்கியின் ஆட்சி கொடுமையானது' - உக்ரைன் எழுத்தாளரின் வைரல் பதிவு!

3rd Mar 2022 03:07 PM

ADVERTISEMENT

உக்ரைனில் அதிபர் ஸெலென்ஸ்கி தலைமையிலான ஆட்சி கொடுமையானது என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக அந்நாட்டு எழுத்தாளர் ஒருவரின் பதிவு வைரலாகி வருகிறது. 

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் போர்த் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து ரஷிய ராணுவம் முன்னேறி வருகிறது. ரஷியாவின் தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. எனினும் ரஷியாவை ஆயுதங்களுடன் எதிர்கொண்டு வருகிறது உக்ரைன். 

இந்நிலையில், உக்ரைன் மக்களுக்கு உக்ரேனியர்களும் அச்சுறுத்தலாக இருப்பதாக எழுத்தாளர் கொன்சலோ லிரா கூறுகிறார். 

இதுகுறித்த விடியோ பதிவொன்றில் அவர்,  உக்ரைன் மக்களுக்கு ரஷிய ராணுவம் மட்டும் அச்சுறுத்தலாக இருக்கவில்லை. உக்ரேனியர்களே அச்சுறுத்தலாக இருக்கின்றனர். 

ADVERTISEMENT

உக்ரைனில் ரஷியா போர் தொடுத்த நிலையில் அதிபர் ஸெலென்ஸ்கி, உக்ரைனில் உள்ள குற்றவாளிகளை விடுதலை செய்து, அவர்கள் கைகளில் ஆயுதங்களை வழங்கியுள்ளார். குற்றவாளிகள் பலரும் உயர் ரக ராணுவ ஆயுதங்களுடன் வலம் வருகின்றனர். ஆயுதங்களை வைத்து அந்த குற்றவாளிகள் கொள்ளைச் சம்பவங்களிலும் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதிலும் ஈடுபடுகின்றனர். 

நேற்று இரவு உக்ரைனில் கீவ் நகரில் நடத்தப்பட்ட சில துப்பாக்கிச்சூடுகளை ரஷிய ராணுவம் நடத்தவில்லை. அந்த நேரத்தில் ரஷிய வீரர்கள் அந்த இடத்திலிருந்து 10 கிமீ தூரத்துக்கு அப்பால் இருந்தனர். அவர்களால் எப்படி கீவில் துப்பாக்கிச்சூடு நடத்த முடியும்?

உக்ரைன் குற்றவாளிகள் குழுவாக இணைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். சொந்த பகைகளை தீர்த்தபிறகு அவர்கள் பொதுமக்களை குறிவைப்பார்கள்.

ரஷியர்களுக்கு எதிராக போர் புரிகிறோம் என்ற பெயரில் உக்ரைனில் இந்த குற்றவாளிகள் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். இது அபத்தமானது, பொறுப்பற்றது, ஸெலென்ஸ்கி தலைமையிலான ஆட்சி கொடுமையானது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

மேற்கத்திய ஊடகங்கள் இதைப் பற்றி பேசுவதில்லை. ரஷியர்களாலோ அல்லது உக்ரைன் ராணுவத்தினாலோ நான் கொல்லப்படுவதை பற்றி கவலைப்படவில்லை. ஆனால், குற்றவாளிகளால் சுடப்படுவதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். இது என்னிடம் கோபத்தை ஏற்படுத்துகிறது. அதிபரின் இந்த முடிவு, உக்ரைன் மக்களின் மரணத்தையும் துன்பத்தையும் மட்டுமே ஏற்படுத்தும்' என்று பதிவிட்டுள்ளார். 

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள சூழ்நிலையில், உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வரும் நிலையில் உக்ரைன் எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு பதிவிட்டுள்ளது சர்ச்சையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

இதையும் படிக்க | உக்ரைனை ரஷியா தாக்குவதன் உள்(ள)நோக்கம் என்ன? அலசல் ரிப்போர்ட்!

ADVERTISEMENT
ADVERTISEMENT