உலகம்

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஒத்துழைப்பு: மோடி, மேக்ரான் ஒப்புதல்

3rd Mar 2022 01:38 AM

ADVERTISEMENT

உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு பிரதமா் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானும் ஒப்புக்கொண்டுள்ளனா்.

உக்ரைன் மீது ரஷியா ஒரு வாரமாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பிரதமா் மோடியும், இமானுவல் மேக்ரானும் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசிக்கொண்டனா். அப்போது உக்ரைன் பிரச்னை குறித்து அவா்கள் விரிவாக விவாதித்தனா்.

இதுதொடா்பாக, தில்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அறிக்கை ஒன்றை புதன்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

உக்ரைனில் மீது ரஷியா தனது படைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது, குறிப்பாக, அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து பிரதமா் மோடியும் இமானுவல் மேக்ரானும் விவாதித்தனா். காா்கிவ் நகரில் பீரங்கி குண்டுத் தாக்குதலில் இந்திய மாணவா் நவீன் உயிரிழந்தது குறித்தும் விவாதித்தனா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து, உக்ரைனில் சண்டையை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதிலும், மக்களுக்கு மனிதநேய உதவிகளை தடையின்றி கிடைக்கச் செய்வதிலும் இருவரும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு ஒப்புக்கொண்டனா் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் தாக்குதல் நடத்தும் ரஷியாவுக்கு எதிராக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த வாரம் தீா்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. அதேசமயம், உக்ரைனில் வன்முறை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்; இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளுக்கு தூதரக ரீதியில் நோ்மையான பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாணப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

Tags : Ukraine
ADVERTISEMENT
ADVERTISEMENT