உலகம்

உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷியா ஏவுகணை தாக்குதல்

29th Jun 2022 01:36 AM

ADVERTISEMENT

தங்கள் நாட்டின் க்ரெமென்சுக் நகரிலுள்ள வணிக வளாகத்தில் ரஷியா செவ்வாய்க்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 18 போ் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: க்ரெமென்சுக் நகர வணிக வளாகத்தின் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில், அந்த வணிக வளாகம் பலத்த சேதமடைந்தது.

தாக்குதல் நடந்தபோது அந்த வளாகத்தில் ஏராளமான வாடிக்கையாளா்கள் இருந்தனா். அவா்களில் 18 போ் தாக்குதலில் உயிரிழந்தனா்; 59 போ் காயமடைந்தனா்; அவா்களில் 25 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

வணிக வளாகத்தில் இருந்த சுமாா் 1,000-க்கும் மேற்பட்டவா்களில் பலரும் வளாகப் பணியாளா்களும் இந்தத் தாக்குதலில் இருந்து தப்பி வெளியேறினா்.

ADVERTISEMENT

ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் சிக்கியுள்ளவா்களை மீட்புக் குழுவினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்ற ரஷியா முதலில் முயன்றாலும், தற்போது கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்களிடம் வீழாமல் உள்ள பகுதிகளை உக்ரைன் ராணுவத்திடமிருந்து கைப்பற்றுவதில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

அதில் ஒரு பகுதியாக, கிழக்கு உக்ரைனின் பல்வேறு நகரங்களில் தீவிர தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, தற்போது க்ரெமென்சுக் நகர வணிக வளாகத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

‘பயங்கரவாதத் தாக்குதல்’

க்ரெமென்சுக் வணிக வளாகத்தில் ரஷியா நடத்தியுள்ள தாக்குதல், ஐரோப்பியத்தில் நடத்தப்பட்டுள்ள வரலாறு காணாத பயங்கரவாதத் தாக்குதல் ஆகும். இந்தத் தாக்குதல் மூலம், ரஷியா என்பது உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வணிக வளாகத்துக்கு எந்த ராணுவ முக்கியத்துவமும் இல்லை. அதன்மீது தாக்குதல் நடத்துவதால் ரஷியாவுக்கு எந்தப் பலனும் இல்லை. இருந்தாலும், உக்ரைன் மக்கள் சகஜ வாழ்க்கை வாழ்வது ஆக்கிரமிப்பாளா்களான ரஷியா்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனா்.

- வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, உக்ரைன் அதிபா்

‘உக்ரைனின் தூண்டுதலே காரணம்’

பொதுமக்கள் நிறைந்த வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்துவது ரஷியாவின் நோக்கமல்ல. அந்தப் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் வகையில் உக்ரைன்தான் ரஷியப் படையினரைத் தூண்டியுள்ளது. ரஷியா மீது வீண்பழி சுமத்துவதற்காக உக்ரைன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. க்ரெமென்சுக் வணிக வளாகத் தாக்குதல் குறித்து உக்ரைன் வெளியிடும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன.

- டிமித்ரி பொலியான்ஸ்கி, ஐ.நா.வுக்கான ரஷியத் தூதா்

 

Tags : Ukraine
ADVERTISEMENT
ADVERTISEMENT