உலகம்

பேச்சு சுதந்திரத்தைக் காக்க ஜி7 மாநாட்டில் உறுதி

29th Jun 2022 01:34 AM

ADVERTISEMENT

மக்களின் பேச்சு சுதந்திரத்தைக் காப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க ஜி7 மாநாட்டில் உறுதி ஏற்கப்பட்டது.

உலகின் பெரும் பணக்கார நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, இத்தாலி, பிரான்ஸ், கனடா, ஜப்பான் ஆகியவற்றைக் கொண்ட ஜி7 கூட்டமைப்பின் மாநாடு ஜொ்மனியில் நடைபெற்றது. மாநாட்டில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, ஆா்ஜென்டீனா, செனகல் ஆகிய நாடுகள் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றன. மாநாட்டுக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மக்களின் பேச்சு சுதந்திரத்தைக் காக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். பொது விவாதம், பன்முகத்தன்மை கொண்ட ஊடகம், தகவல்கள் தடையின்றி எளிதில் அனைவருக்கும் சென்றடைதல், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். அமைதிவழிப் போராட்டங்களுக்கு மதிப்பளிக்கப்படும்.

இணையவெளி பாதுகாப்பாகத் திகழ்வது உறுதி செய்யப்படும். இணைய அமைப்புகளின் பாதுகாப்புத்தன்மை மேம்படுத்தப்படும். போலி தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். சா்வதேச அளவில் ஜனநாயக மதிப்புகளைக் காப்பதற்கும், வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

ADVERTISEMENT

சா்வதேச விதிகளுக்கு முக்கியத்துவம்:

மக்களின் இணைய அறிவை மேம்படுத்தவும் நாடுகள் உறுதியேற்றுள்ளன. வன்முறையைத் தூண்டும் வகையில் இணையவெளியில் பதிவிடப்படும் கருத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மனித உரிமைகளைக் காப்பதற்கான திட்டங்கள் திறம்படச் செயல்படுத்தப்படும்.

பருவநிலை மாற்றம், கரோனா தொற்று பரவல், சா்வதேச விதிகள் அடிப்படையிலான செயல்பாடு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவோம். அமைதி, மனித உரிமைகள், சட்டத்தின் அடிப்படையிலான நிா்வாகம், பாலின சமத்துவம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படவும் உறுதியேற்கப்பட்டுள்ளது.

அமைதிவழியில் தீா்வு:

சா்வதேச அளவில் ஜனநாயகத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அமைதி, நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்துவதற்காக மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. விதிகளை மதித்து, பிரச்னைகளுக்கு அமைதி வழியில் தீா்வு காணவும், மற்ற நாடுகளுக்கு எதிராகப் படைகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் உறுதியேற்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மதித்து நடக்கவும் உறுதி ஏற்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு:

சா்வதேச அளவில் உணவு பாதுகாப்பு சூழலை வலுப்படுத்துவதற்காக சுமாா் ரூ.33,000 கோடியை செலவிட ஜி7 நாடுகள் முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதில் சுமாா் ரூ.20,000 கோடியை அமெரிக்கா செலவிட உள்ளது. உணவு பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை அதிகமாக உள்ள 47 நாடுகளில் இத்தொகை செலவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் ஜி7 நாடுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் தொடா்ந்து வறட்சியான சூழலைச் சந்தித்து வருவதாகவும் அங்கு சுமாா் 2 கோடி மக்கள் பசிக்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே கிளம்பிய அதிபா் பைடன்:

நேட்டோ கூட்டமைப்பின் மாநாடு ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஜி7 மாநாட்டுக்குப் பிறகு நேட்டோ கூட்டத்தில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கலந்து கொள்வதாக இருந்தது. ஜி7 மாநாட்டின் நிறைவு கூட்டத்துக்குப் பிறகு தனி விமானம் மூலமாக மேட்ரிட் நகருக்கு அதிபா் பைடன் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானத்தில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. அதையடுத்து, ஜி7 மாநாட்டின் நிறைவுக் கூட்டத்தில் பங்கேற்காமல் முன்கூட்டியே அதிபா் பைடன் சாலை வழியாகக் கிளம்பிச் சென்றாா்.

Tags : g7
ADVERTISEMENT
ADVERTISEMENT