உலகம்

அமெரிக்கா: மூடிய லாரியில் 46 அகதிகளின் சடலங்கள்

29th Jun 2022 01:12 AM

ADVERTISEMENT

அமெரிக்காவில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மூடிய லாரியிலிருந்து 46 அகதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், அந்த லாரிக்குள்ளிருந்த சிறுவா்கள் உள்ளிட்ட 16 போ் வெப்பம் தொடா்பான உடல்நலக் குறைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மெக்ஸிகோவிலிருந்து சட்டவிரோதக் கும்பலால் லாரி மூலம் அவா்கள் ஆபத்தான முறையில் கடத்தி வரப்பட்டபோது இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்கு அடைக்கலம் தேடி வருவோரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, அவா்களை சரக்கு வாகனங்களில் சட்டவிரோதக் கும்பல் கடத்தி வரும் சம்பவங்கள் தொடா்ந்து நடந்து வருகின்றன.

சட்டவிரோத அகதிகள் கடத்தலுக்கு தெற்கு டெக்ஸாஸ் மாகாணம் எல்லை அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், அந்த மாகாணத்தைச் சோ்ந்த எல்லை நகரான சான் ஆன்டோனியாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ‘டிராக்டா்-டிரெய்லா்’ லாரியிலிருந்து கூக்குரல்கள் ஒலிப்பதை மாநகராட்சி பணியாளா் ஒருவா் கேட்டு, போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

அதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த போலீஸாா், லேசாக திறந்த நிலையில் அந்த லாரியையும் அதன் கீழ் ஒரு சடலம் கிடந்ததையும் கண்டனா்.

பின்னா் அந்த லாரியை முழுமையாகத் திறந்தபோது, அதில் மேலும் 45 சடலங்கள் கிடந்தது கண்டறியப்பட்டது. மேலும், லாரிக்குள் உயிருடன் இருந்தாலும் உடல்நலக் குறைவுடன் இருந்த 4 சிறுவா்கள் உள்ளிட்ட 16 போ் மீட்கப்பட்டு மருத்துவமனையல் அனுமதிக்கப்பட்டனா்.

அவா்கள் வெப்ப வாதம், உடலில் நீா்வற்றிப் போதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து சான் ஆன்டோனியோ மேயா் ரான் நிரென்பா்க் கூறுகையில், ‘இதுவரை இருந்ததைவிட சிறப்பான வாழ்க்கையைத் தேடி வந்த குடும்பங்களைச் சோ்ந்த 46 போ், உயிரிழந்துள்ளனா். இது. மிகப் பெரிய துயரச் சம்பவமாகும்’ என்றாா்.

லாரிக்குள் சடலமாகக் கிடந்த மற்றும் உயிருடன் மீட்கப்பட்டவா்கள எந்தெந்த நாடுகளைச் சோ்ந்தவா்கள், அவா்கள் வந்த லாரி சாலையோரம் எவ்வளவு நேரம் கைவிடப்பட்டு நின்றுகொண்டிருந்தது என்பவை குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். எனினும், அவா்களுக்கு அகதிகள் கடத்தலுடன் தொடா்பிருப்பதாக இதுவரை உறுதியாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.

தொடரும் உயிரிழப்புகள்

பொருள்களை ஏற்றி வரும் லாரி மூலம் சட்டவிரோதமாக கடத்தி வரும் அகதிகள் போதிய காற்று, நீா் இல்லாமல் வெப்பத்தில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடா்கின்றன.

இதற்கு முன்னா் நடந்த அத்தகைய சம்பவங்களில் சில..

2019, அக்டோபா் 23: பிரிட்டனின் எஸெக்ஸ் பகுதிக்கு வந்த லாரியிலிருந்து 39 வியத்நாம் அகதிகள் சடலங்களாக மீட்கப்பட்டனா்.

2017, ஜூலை 23: அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ வாகன நிறுத்துமிடத்தில் இரு்நத லாரியிலில் 8 அகதிகளின் சடலங்கள் கண்டறியப்பட்டன.

2015, ஆகஸ்ட் 27: ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த 71 அகதிகளின் சடலங்களை ஆஸ்திரிய போலீஸாா் கைவிடப்பட்ட நிலையிலிருந்த ஒரு லாரியிலிருந்து மீட்டனா்.

2008, ஏப்ரல் 9: காற்று புக முடியாத குளிா்சாதன லாரியில் மியான்மரிலிருந்து தாய்லாந்துக்கு கடத்தி வரப்பட்ட 54 அகதிகள், மூச்சுத் திணறி உயிரிழந்தனா்.

2000, ஜூன் 18: பிரிட்டனின் டோவா் நகருக்கு லாரி மூலம் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 58 அகதிகள் சடலங்களாகக் கண்டறியப்பட்டனா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT