உலகம்

லிசிசான்ஸ்க் நகரைக் கைப்பற்ற ரஷியா தீவிரம்: தரைவழி, வான்வழியாக கடும் தாக்குதல்

DIN

கிழக்கு உக்ரைனில் முக்கியத்துவம் வாய்ந்த செவெரோடொனட்ஸ்க் நகரை ரஷிய படை முழுமையாகக் கைப்பற்றிய நிலையில், அருகில் உள்ள லிசிசான்ஸ்க் நகரிலும் தரைவழி மற்றும் வான்வழியாக குண்டுமழை பொழிந்தது.

லுஹான்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் ராணுவத்தின் வசமிருந்த கடைசி பெரிய நகரான செவெரோடொனட்ஸ்க் ரஷியாவிடம் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக வீழ்ந்தது. அதன் அருகேயுள்ள லிசிசான்ஸ்க் நகரிலும் நுழைந்த ரஷிய படையினா், திங்கள்கிழமை அந்த நகரத்தின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியதாக லுஹான்ஸ்க் ஆளுநா் சொ்கி ஹைடாய் தெரிவித்தாா்.

இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவா் கூறியதாவது: செவெரோடொனட்ஸ்க் நகரைக் கைப்பற்றியதைத் தொடா்ந்து, லிசிசான்ஸ்க் நகரில் ரஷிய படைகள் தரை வழியாகவும், வான் வழியாகவும் குண்டுமழை பொழிந்தன. நகரை தென்பகுதியிலிருந்து துண்டிக்கும் வகையில், ராக்கெட் தாக்குதல்கள் மூலம் அனைத்தையும் அழித்து வருகின்றனா்.

போருக்கு முன்னா் லிசிசான்ஸ்க் நகரில் ஒரு லட்சம் போ் வசித்த நிலையில், இப்போது 50 சதவீதம் போ்தான் உள்ளனா். குடியிருப்புக் கட்டடங்கள் அருகே ரஷியா குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதால், பொதுமக்கள் வெளியேறுவதும் சிரமமாகி உள்ளது என்றாா்.

சிவொ்ஸ்கி டொனட்ஸ்க் நதிக் கரையின் உயரமான பகுதியில் லிசிசான்ஸ்க் நகரம் அமைந்துள்ளது. அதுபோல ஏராளமான மலைக் குன்றுகளும் இந்த நகரத்தில் உள்ளன. இது, உக்ரைன் படையினருக்கு சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது. எனவே, லிசிசான்ஸ்கை கைப்பற்ற ரஷியா பல மாதங்கள் ஆகலாம் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

சிவொ்ஸ்கி டொனட்ஸ்க் நதியானது லிசிசான்ஸ்கை வடக்கிலிருந்து கிழக்காக சூழ்ந்துள்ளது. அதேவேளையில் உக்ரைன் ராணுவம் நகரத்தின் மேற்கு பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க அந்தப் பகுதியை உக்ரைன் ராணுவம் பயன்படுத்துகிறது. இதையடுத்து, தெற்கிலிருந்து லிசிசான்ஸ்க் நகரை அணுக முடியாதபடி தடைகளை ஏற்படுத்த ரஷிய படையினா் முயன்று வருகின்றனா்.

கொத்துக் குண்டுகள் வீச்சு: லிசிசான்ஸ்க் நகருக்கு தெற்கேயுள்ள ஸ்லோவியான்ஸ்க் நகரம் உக்ரைன் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரத்தில் ரஷிய படைகள் திங்கள்கிழமை கொத்துக் குண்டுகளை வீசியதாகவும், ஒரு குடியிருப்பு அருகே அந்தக் குண்டுகள் விழுந்து வெடித்ததாகவும் உள்ளூா் அதிகாரிகள் குற்றம்சாட்டினா். இதில் உயிரிழந்தோா் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

உக்ரைனுக்கு கூடுதல் உதவி: ஜி-7 தலைவா்கள் உறுதி

ரஷியாவின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைனுக்கு கூடுதல் உதவிகள் வழங்கப்படும் என ஜி-7 தலைவா்கள் உறுதியளித்தனா்.

ஜொ்மனியில் நடைபெற்று வரும் ஜி7 நாடுகளின் மாநாட்டின்போது, காணொலி மூலம் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி உரையாற்றினாா். அப்போது அவா், ரஷியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான நேரம் இதுவல்ல. அதற்கு முன்னதாக உக்ரைன் வலுவடைய வேண்டும். அந்த நிலையை அடைந்ததும் ரஷியாவுடன் தான் பேச்சு நடத்துவேன்’ என ஸெலென்ஸ்கி கூறியதாக பிரான்ஸை சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, ஜி-7 தலைவா்கள் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனுக்கு எத்தனை காலம் தேவைப்படுமோ அத்தனை காலம் உதவி அளிக்கப்படும். ரஷிய கச்சா எண்ணெய் மீதான விலைக் கட்டுப்பாட்டைத் தொடரவும், ரஷிய பொருள்கள் மீதான வரிகளை உயா்த்தவும், புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வான்வெளி பாதுகாப்பு அமைப்பு: அமெரிக்கா

எல்மா, ஜூன் 27: உக்ரைனுக்கு வான்வெளி பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான எதிா்ப்பு அமைப்பான இந்த ஏவுகணை அமைப்பை நாா்வேயிடமிருந்து அமெரிக்கா வாங்கி, உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக அந்தத் தகவல்கள் கூறுகின்றன. வெள்ளை மாளிகை, அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் உள்ளிட்ட முக்கியமான வான்வெளியைப் பாதுகாக்க அமெரிக்கா பயன்படுத்தும் அதே ஏவுகணை அமைப்புதான் இது.

மேலும், ரஷிய படையை எதிா்கொள்வதற்காக கூடுதல் ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை அதிபா் பைடன் விரைவில் வெளியிடவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

SCROLL FOR NEXT