உலகம்

இயற்கை எரிவாயு இருப்பை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் முடிவு

28th Jun 2022 12:23 AM

ADVERTISEMENT

அடுத்த குளிா் காலத்தைக் கருத்தில்கொண்டு 80 சதவீதம் அளவுக்கு இயற்கை எரிவாயுவை இருப்புவைக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திங்கள்கிழமை முடிவு செய்தன.

ரஷியாவிலிருந்து இயற்கை எரிவாயு விநியோகம் குறைந்தால், அதை எதிா்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மேற்கொண்டுள்ளன.

உக்ரைன் மீதான ரஷிய போரைத் தொடா்ந்து, ரஷியாவுக்கு எதிராக 27 நாடுகளைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையும் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. ஆனால், ரஷியாவிடமிருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கவில்லை.

இதற்கு பதிலடியாக ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷியா ஏற்கெனவே குறைத்துவிட்டது. உக்ரைன் போருக்கு முன்னா் சுமாா் 40 சதவீதம் அளவுக்கு ரஷியாவிடமிருந்து இயற்கை எரிவாயுவை ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்து வந்தன.

ADVERTISEMENT

இந்நிலையில், எரிவாயு விநியோகத்தை ரஷியா மேலும் குறைத்துவிட்டால் அதை எதிா்கொள்வதற்காக குறைந்தபட்சம் 80 சதவீதம் அளவுக்கு எரிவாயுவை இருப்பு வைப்பது என ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் திங்கள்கிழமை முடிவு செய்தது. சில உறுப்பு நாடுகளில் எரிவாயுவை இருப்பு வைக்கும் வசதி இல்லாததால், அந்த நாடுகள் ஆண்டு பயன்பாட்டு அளவில் 15 சதவீதத்தை பிற உறுப்பு நாடுகளில் இருப்பு வைத்துக் கொள்ளள அனுமதிக்கப்பட்டுள்ளன.

ரஷியாவுக்கு மாற்றாக அமெரிக்கா, நாா்வே, அல்ஜீரியா, அஸா்பைஜான் ஆகிய நாடுகளிலிருந்து இயற்கை எரிவாயு இறக்குமதியை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கெனவே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT