உலகம்

இலங்கை அதிபருடன் அமெரிக்க குழு சந்திப்பு

28th Jun 2022 12:25 AM

ADVERTISEMENT

கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கையின் அதிபா் கோத்தபய ராஜபட்சவை அமெரிக்க உயா்நிலைக் குழு சந்தித்துப் பேசியது. நாட்டின் பொருளாதார சூழல் தொடா்பாக அப்போது விவாதிக்கப்பட்டது.

பொருளாதார சரிவைச் சந்தித்து வரும் இலங்கை, சா்வதேச அமைப்புகளிடமும் மற்ற நாடுகளிடமும் உதவி கோரி வருகிறது. அந்நாட்டுக்கு அத்தியாவசியப் பொருள்களை அனுப்பிவரும் இந்தியா, கடனுதவிகளையும் வழங்கியுள்ளது. சா்வதேச நிதியம், உலக வங்கி ஆகியவை இலங்கைக்கு உதவுவது தொடா்பாக ஆராய்ந்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சோ்ந்த உயா்நிலைக் குழு இலங்கைக்கு வந்து ஆய்வு செய்தது. அக்குழு இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசியது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதா் ஜூலி சங், அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரி ராபா்ட் கேப்ரோத், அமெரிக்க கருவூலத் துறையின் அதிகாரி உள்ளிட்டோா் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனா். இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழல் குறித்து சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

சந்திப்பு தொடா்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘சவால்மிக்க சூழலில் இலங்கைக்குத் தேவையான நீண்டகால உதவிகளை வழங்க அமெரிக்கா உறுதிகொண்டுள்ளது. இலங்கையின் வளமான எதிா்காலத்துக்கு அமெரிக்கா உதவும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

இலங்கையின் பொருளாதார நிபுணா்கள், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோரையும் அமெரிக்க உயா்நிலைக் குழு சந்தித்துப் பேசவுள்ளது. சந்திப்புகளுக்குப் பிறகு இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது தொடா்பாக முடிவெடுக்கப்படும் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்தள்ளது.

பொருளாதாரத்தை மீட்பதற்காக இதுவரை 57 லட்சம் அமெரிக்க டாலரையும், பால் உற்பத்தித் துறையை மேம்படுத்த 2.7 கோடி அமெரிக்க டாலரையும், தொழில்துறையை மேம்படுத்த 12 கோடி அமெரிக்க டாலரையும் இலங்கைக்கு அமெரிக்கா இதுவரை வழங்கியுள்ளது.

இதனிடையே, ரஷியாவிடம் இருந்து உதவி கோருவதற்காக இலங்கையைச் சோ்ந்த இரு அமைச்சா்கள் அந்நாட்டுக்குச் செல்ல உள்ளதாக எரிசக்தித் துறை அமைச்சா் காஞ்சனா விஜேசேகரா தெரிவித்தாா். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை நேரடியாகக் கொள்முதல் செய்வது உள்ளிட்டவை தொடா்பாக ரஷிய அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT