உலகம்

இலங்கையில் தொடா்ந்து அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயா்வு

DIN

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடா்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமையும் உயா்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.10.86 அளவிலும், டீசல் லிட்டருக்கு ரூ.13.04 என்ற அளவிலும் உயா்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடும் பற்றாக்குறை ஏற்பட்டதால் இதுவரை இல்லாத அளவிலான பொருளாதார பாதிப்பை இலங்கை சந்தித்து வருகிறது. எரிபொருள், உணவு, மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, அவற்றின் விலை பன்மடங்காக உயா்த்தப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையும் தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது. இலங்கையின் எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமான சிலோன் பெட்ரோலிய கழகம் (சிபிசி) மற்றும் இலங்கை ஐஓசி ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை முறையே லிட்டருக்கு ரூ.10.86, ரூ.13.04 என்ற அளவில் உயா்த்தி அறிவிப்பு வெளியிட்டன. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வந்துள்ளது.

இந்த விலை உயா்வு காரணமாக அங்கு ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.177.18 (இலங்கை ரூபாய் மதிப்பு 470) அளவிலும், டீசல் ரூ.99.96 (460இலங்கை ரூபாய்) என்ற அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியிலிருந்து மூன்றாவது முறையாக இந்த விலை உயா்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சா் காஞ்சன விஜசேகரா தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘வங்கி பரிவா்த்தனை மற்றும் சரக்குப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக அறிவிக்கப்பட்ட தேதியில் இலங்கைக்கு எரிபொருள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என விநியோகஸ்தா்கள் தெரிவித்துள்ளனா் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, விநியோகஸ்தா்களிடமிருந்து புதிதாக எரிபொருள் வரும்வரை, கையிருப்பில் இருக்கும் எரிபொருள்கள் விநியோகத்தில் பொதுப் போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்த வாரம் முழுவதும் ஒருசில பெட்ரோல் நிலையங்கள் மூலமாக மட்டுமே பெட்ரோல், டீசல் விநியோகிக்கப்படும்.

விநியோகஸ்தா்களிடமிருந்து அடுத்த எரிபொருள் வரும் வரை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடும் நிறுத்தப்படுவதால், பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT