உலகம்

கருக்கலைப்புக்குத் தடை: அதிரும் அமெரிக்கா! விளைவுகள் என்னென்ன?

கோமதி எம். முத்துமாரி

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கான பெண்களின் அடிப்படை உரிமையொன்றை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. 

இதன் மூலமாக அமெரிக்க பெண்களுக்குக் கருக்கலைப்புக்கான உரிமையை வழங்கிவந்த 50 ஆண்டு காலமாக நடைமுறையிலிருந்த முந்தைய உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. 

அமெரிக்காவில் (அதாவது, 50 மாகாணங்களைக் கொண்ட அமெரிக்க ஐக்கிய நாடுகளில்) கருக்கலைப்பு குறித்த சட்டங்கள் என்பது ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு விதமாக வேறுபட்டிருக்கிறது. அமெரிக்காவில் கருக்கலைப்பு குற்றம் என சில மாகாணங்கள் சட்டம் இயற்றியிருந்தன. இதனால் அமெரிக்கப் பெண்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிவந்தனர்.

இந்த நடைமுறையை மாற்றியமைக்கும் விதமாக, கடந்த 1973 ஆம் ஆண்டு ஜேன் ரோ என்ற பெண் தொடர்ந்த வழக்கில், கருத்தரிப்பது மற்றும் கருக்கலைப்பு என்பதைப் பெண்களின் தனிப்பட்ட உரிமை என்றும் கருக்கலைப்பு சட்டபூர்வமானது என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பையளித்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கில் வழக்குத் தொடுத்த ஜேன் ரோ என்ற பெண்ணையும் எதிர்த்து வாதாடிய ஹென்றி வேட் என்ற வழக்கறிஞரையும்  குறிப்பிடும்வகையில், இது 'ரோ வெர்சஸ் வேட் வழக்கு' என்றே வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தீர்ப்பினை அடுத்து, பெருமளவில் அனைத்து மாகாணங்களிலுமே பெண்கள் கருக்கலைப்பு அனுமதிக்கப்பட்டதால் முறையான ஆனால், தேவையற்ற மற்றும் முறையற்ற கருத்தரித்தலால் ஏற்படும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்தன. 

இதனிடையே 1992 ஆம் ஆண்டு ஒரு வழக்கில், 23 முதல் 24 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. 

இந்நிலையில்தான் கருவுற்ற 15 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்வதற்குத் தடை விதிக்கும் மிஸிஸிப்பி மாகாண சட்டத்துக்கு எதிராக கடந்த 2021-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மகளிா் உரிமை அமைப்பினா் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கில் பெரும்பாலான நீதிபதிகள்,  கருக்கலைப்புக்கு எதிராக இருந்ததால், பெண்களின் கருக்கலைப்பு உரிமையை, 50 ஆண்டுகளாக இருந்த நடைமுறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி, இனி அந்தந்த மாகாணங்கள் பெண்களின் கருக்கலைப்பு குறித்த சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மட்டுமின்றி, பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், நியூசிலாந்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவா்களும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை விமா்சித்துள்ளனா்.

தீர்ப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்துள்ளன. குறிப்பாகப் பெண்கள், சமூக அமைப்புகள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

விளைவுகள் என்னென்ன? 

ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்த ஓர் அரசியலமைப்பு உரிமையை ஜனநாயகம் திரும்பப் பெறும்போது கண்டிப்பாக அதில் ஆழமான ஆபத்தும் இருக்கிறது. பெண்களின் 'பிரசவித்தல்' எனும் உடல் சார்ந்த ஓர் உரிமையைப் பறித்து இக்கட்டான சூழ்நிலையில் தன்னை புகுத்திக்கொண்டுள்ளது அமெரிக்கா. அதன் விளைவாகவே இன்று பெரும்பாலான பெண்கள் வீதிகளில் இறங்கித் தங்களின் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.  

இந்த உத்தரவு வந்த சில நிமிடங்களிலேயே கருக்கலைப்பு மையங்களில் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன, மேலும் சில கருக்கலைப்பு மையங்களும் உடனடியாக மூடப்பட்டன. சில மையங்களில் காத்திருந்த பெண்கள் கூட திருப்பியனுப்பப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. 

இன்றைய சூழ்நிலையில், ஏற்கெனவே 11 மாகாணங்கள், கருக்கலைப்பு குற்றம் என சட்டங்கள் இயற்றியுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் மூலமாக இந்த மாகாணங்கள் இயற்றிய சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து மேலும் சில மாகாணங்கள் கருக்கலைப்பு குறித்த கட்டுப்பாடுகளை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கருக்கலைப்பு செய்யலாமா, எந்த கட்டத்தில் செய்யலாம், என்னென்ன கட்டுப்பாடுகள் என்று அந்தந்த மாகாணங்களே முடிவு செய்யலாம் என்பதால் மாகாணங்கள் இது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. 

தற்போதைய நீதிமன்ற உத்தரவை ஆதரிக்கும் குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்கள் பல, கருக்கலைப்பைத் தடை செய்துள்ள நிலையில், மேலும்  சில குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்களும் கருக்கலைப்பைத் தடை செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், இந்த தீர்ப்பு அமெரிக்காவை, கருக்கலைப்பை அனுமதிக்கும் மாகாணங்கள், கருக்கலைப்பைத் தடை செய்யும் மாகாணங்கள் என்று பிராந்திய ரீதியாக பிரித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. 

இதனால் பாலியல் வன்கொடுமையால் கருத்தரித்த இளம்பெண்கள், திட்டமிடாத, கட்டாயப்படுத்தப்பட்ட, தேவையற்ற கருத்தரிப்புகள், தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய கருத்தரிப்புகளை கலைப்பதற்காக பெண்கள், அதனை அனுமதிக்கும் மாகாணங்களைத் தேடிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.

அதுபோல கருக்கலைப்பு அனுமதியில்லாத பகுதிகளில் ரகசியமான, சட்டத்திற்குப் புறம்பான கருக்கலைப்பு மையங்கள் உருவாகலாம். இவை பாதுகாப்பற்றவை என்பதால் உயிரிழப்புகளும் அதிகரிக்கலாம். கருவுற்ற பெண்களின் உடல்நிலை அல்லது உயிரைப் பாதுகாக்க அரசு தவறுகிறது. பெண்களின் கருத்தரிப்பை முடிவு செய்வதில் மாகாணங்களே ஆதிக்கம் செலுத்த உள்ளன. 

ஒருவேளை கருக்கலைப்பு செய்து அது வெளியில் தெரியவரும்பட்சத்தில் அந்த பெண்கள் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற பெரும் அச்சமும் பெண்களை இப்போது போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளது. அதுபோல மருத்துவர்களும் விசாரணைக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. 

பெண்கள் வீட்டிலேயே மருந்துகளை எடுத்து, உயிர் ஆபத்துகளில் சிக்க நேரிடலாம். அந்தவகையில் இந்த விவகாரத்தில் அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகள் வருங்காலத்தில் மிகப்பெரிய விவாதப்பொருள் ஆகலாம். 

மற்றொரு பக்கம், இந்த விஷயத்தில் சில முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்கள், தங்கள் ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்கத் தொடங்கியுள்ளன. 

கருக்கலைப்பு அனுமதிக்கும் மாகாணங்கள், பிற மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. எனினும், இது ஒவ்வொரு மாகாணத்திற்கு இடையே உள்ள பெண்களிடம் பாகுபாட்டை உருவாக்கும் என்றும் ஒவ்வொருவரின் கலாசாரமும் மாறுபடும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

அமெரிக்க அரசியலமைப்பில் கருக்கலைப்பு குற்றம் என ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மற்ற உரிமைகளையும் பறிக்கலாம் என்பதால் அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வருகிற நவம்பரில் நடைபெறும் இடைக்காலத் தேர்தலில் இந்த பிரச்னையை முன்வைத்து செனட்டில் தங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கணிக்கப்படுகிறது. 

இந்த தீர்ப்பின் மூலமாக கடந்த 25 ஆண்டுகளில் கருக்கலைப்பைத் தடை செய்யும் 4 நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா மாறியிருக்கிறது என்று அமெரிக்காவின் மகப்பேறு உரிமைகளுக்கான மையம் கூறுகிறது. மேலும் உலகளாவிய போக்குகளுடன் அமெரிக்கா முரண்படுகிறது. 

ஏனெனில் சமீபமாக சில நாடுகள் முழுவதுமாக கருக்கலைப்பை அனுமதித்தும், 50-க்கும் மேற்பட்ட நாடுகள் அதன் மீதான கட்டுப்பாட்டை தளர்த்தியும் இந்த விஷயத்தில் அமெரிக்காவைவிட முன்னேறியுள்ளன.

கருக்கலைப்பு கால வரம்பை அதிகரித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் மேலும் முன்னோக்கிச் செல்கின்றன. 

மேலும் இது, உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் சட்ட விதிகளில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், 'பாதுகாப்பான, சட்டபூர்வமான, சரியான கருக்கலைப்பை சர்வதேச மனித உரிமைச் சட்டம் உறுதி செய்கிறது. பெண்கள் தங்களுடைய உடல் மற்றும் வாழ்க்கை ரீதியாக சொந்த முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்பதன் அடிப்படையே இந்த விதி' என்று கூறும்  ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையர் மிச்செல்லே பாச்சலெட், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெண்களின் உரிமைக்கும் பாலின சமத்துவத்துக்கும் விழுந்த மிகப்பெரிய அடி என்று கூறுகிறார். 

இந்த தீர்ப்பு வரக் காரணமான, 15 வாரங்களுக்கு மேல் உள்ள கருவை கலைக்கத் தடை விதித்த மிஸிஸிப்பி மாகாணத்தில்தான் கர்ப்பிணி பெண்களின் இறப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

உலக நாடுகள் பலவும் இன்று முன்னோக்கிச் (முற்போக்குத் தன்மை) செயல்படும் இக்காலத்தில், அடுத்த தலைமுறையை உருவாக்கும் பெண்களின் ஓர் அடிப்படை உரிமையை ரத்து செய்து அமெரிக்கா தன் வளர்ச்சிப் படியில் இருந்து சற்று கீழிறங்கி இருக்கிறது என்று கடுமையாக உலகளாவிய பெண்ணிய  அமைப்புகள்  கண்டனம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT