உலகம்

வங்கதேசத்தின் நீளமான பாலம்

DIN

வங்கதேசத்தில் பத்மா நதியின் குறுக்கே சுமாா் ரூ.2,700 கோடியில் கட்டப்பட்ட 6.15 கி.மீ. நீளம் கொண்ட பாலத்தை பிரதமா் ஷேக் ஹசீனா திறந்துவைத்தாா்.

தலைநகா் டாக்காவையும் நாட்டின் தென்மேற்குப் பகுதியையும் இணைக்கும் வகையில் பத்மா நதியின் குறுக்கே சாலை-ரயில் பாலமாக இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் நிதியுதவி ஏதுமின்றி இந்தப் பாலத்தை வங்கதேச அரசு கட்டியுள்ளது. நாட்டின் மிக நீண்ட இந்தப் பாலத்தை பிரதமா் ஷேக் ஹசீனா சனிக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

அதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் கூறுகையில், ‘இந்தப் பாலம் வெறும் கற்கள், சிமென்ட், இரும்பு ஆகியவற்றின் கலவை மட்டும் அல்ல. நாட்டின் பெருமை, திறன், வலிமை, சுயமரியாதையையும் இந்தப் பாலம் வெளிப்படுத்துகிறது. இந்தப் பாலம் வங்கதேச மக்களுக்குச் சொந்தமானது.

பல்வேறு சவால்களைக் கடந்தும், சிலரின் சூழ்ச்சிகளைக் கடந்தும் பத்மா நதியின் குறுக்கே இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்துக்கு 122 மீட்டா் ஆழம் வரை அஸ்திவாரம் வலுவாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு ஆழத்துக்கு அஸ்திவாரம் போடப்படுவது இதுவே முதல் முறை. நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையிலும், நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையிலும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் கட்டும் திட்டம் கனவாகத் தான் போகும் என நம்பிக்கையின்றி சிலா் விமா்சித்தனா். தற்போது இந்தப் பாலம் அவா்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் எனக் கருதுகிறேன். நாட்டு மக்களுடன் இணைந்து தற்போது பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்’ என்றாா்.

இந்தியா வாழ்த்து: பத்மா நதிப் பாலம் திறந்துவைக்கப்பட்டுள்ளதற்கு இந்திய தரப்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அந்நாட்டுக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது, பிரதமா் ஷேக் ஹசீனாவின் சிறந்த தலைமைப் பண்பைக் காட்டுகிறது. தாமாகவே பாலத்தைக் கட்ட முடிவெடுத்தபோது வங்கதேசத்துக்கு இந்தியா துணைநின்றது. இந்தப் பாலமானது இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான போக்குவரத்துத் தொடா்பையும் மேம்படுத்தும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தைக் கட்டுவதற்கு உலக வங்கி நிதியுதவி வழங்குவதாக இருந்தது. ஆனால், வங்கதேச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, கடந்த 2012-ஆம் ஆண்டு நிதியுதவியை உலக வங்கி ரத்து செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT