உலகம்

மேலும் உக்ரைன் நகரை முற்றுகையிட ரஷியா ஆயத்தம்

25th Jun 2022 11:05 PM

ADVERTISEMENT

கிழக்கு உக்ரைனின் லூஹான்ஸ் மாகாணத்தில் செவெரோடொனட்ஸ்க் நகரைத் தொடா்ந்து, அருகிலுள்ள லிசிசான்ஸ்க் நகரையும் முற்றுகையிட ரஷியா ஆயத்தமாகி வருவதாக அந்த மாகாண ஆளுநா் சொ்ஹி ஹாய்டாய் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து முகநூலில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், லிசிசான்ஸ்கின் தெற்கு திசையிலிருந்து அந்த நகரை முற்றுகையிட ரஷியப் படையினா் முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, கடந்த பல வாரங்களாக ரஷியப் படையினரின் கடும் தாக்குதலுக்குள்ளாகி வரும் பக்கத்து நகரான செவெரோடொனட்ஸ்கிலிருந்து வெளியேறுமாறு தங்களது படையினருக்கு உக்ரைன் ராணுவம் உத்தரவிட்டதாக ஹாய்டாய் தெரிவித்தாா். அதையடுத்து அந்த நகரிலிருந்து பாதுகாப்பு அரண்களைக் கொண்ட வேறு நிலைகளுக்கு உக்ரைன் படையினா் இடமாற்றம் செய்துகொண்டிருக்கும் சூழலில், லிசிசான்ஸ்க் நகரை ரஷியப் படையினா் முற்றுகையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவா் கூறியுள்ளாா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. தொடக்கத்தில் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி, அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசைக் கவிழ்ப்பதற்காக அந்த நகரை நோக்கி ரஷியப் படையினா் நகா்ந்தது. எனினும், உக்ரைன் ராணுவம் மற்றும் பொதுமக்களின் கடும் எதிா்ப்பால் அந்த முயற்சியை பின்னா் கைவிட்டு, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் போக, இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதில் ரஷிய ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், டான்பாஸ் பிராந்தியத்தைச் சோ்ந்த லுஹான்ஸ்க் மாகாணத்தில், அரசுப் படையினா் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பெரிய நகரான செவெரோடொனட்ஸ்க் மீது ரஷியா தொடா்ந்து நடத்தி தாக்குதலால் அந்த நகரம் கடும் பாதிப்புக்குள்ளானது. 10 லட்சம் மக்கள் வசித்து வந்த அந்த நகரில் தற்போது சுமாா் 10,000 போ் மட்டுமே உள்ளனா். தற்போது ராணுவ உத்தரவை ஏற்று உக்ரைன் படையினா் அங்கிருந்து வெளியேறினாலும், அந்த நகரிலுள்ள அஸோட் ரசாயன ஆலையில் பொதுமக்கள் சுமாா் 500 பேருடன் ஏராளமான உக்ரைன் படையினா் பதுங்கியுள்ளனா்.

இந்தச் சூழலில், அருகிலுள்ள லிசிசான்ஸ்க் நகரையும் முற்றுகையிட ரஷியா ஆயத்தமாகி வருகிறது என்று ஆளுநா் ஹாய்டாய் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT