உலகம்

கருக்கலைப்பு உரிமைக்குத் தடை: அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீா்ப்பால் சா்வதேச அளவில் சா்ச்சை

25th Jun 2022 11:36 PM

ADVERTISEMENT

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கான பெண்களின் அடிப்படை உரிமையை ரத்து செய்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு சா்வதேச அளவில் சா்ச்சையை எழுப்பியுள்ளது.

அந்தத் தீா்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு உலக நாடுகளின் தலைவா்களும் தீா்ப்பை விமா்சித்துள்ளனா். அதே நேரம், கருக்கலைப்பு உரிமைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட பலா் இந்தத் தீா்ப்பை வரவேற்றுள்ளனா்.

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கான விதிமுறைகள் மாகாணத்துக்கு மாகாணம் வேறுபட்டாலும், அது பெண்களின் அடிப்படை உரிமையாக இருந்து வந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக ஜேன் ரோ என்ற பெண்ணுக்கும் ஹென்றி வேட் என்ற வழக்குரைருக்கும் உச்சநீதிமன்றத்தில் 1973-ஆம் ஆண்டு நடைபெற்று வந்த வழக்கில், கருக்கலைப்பு என்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பெண்களின் அடிப்படை உரிமை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பு வழங்கப்பட்டதற்குப் பிறகு இந்த நிலை நீடித்து வருகிறது.

ADVERTISEMENT

‘ரோ வா்சஸ் வேட்’ தீா்ப்பு என்று சுருக்கமாக அழைக்கப்படும் அந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, நாடு முழுவதும் கருக்கலைப்பு விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. மேலும், மருத்துவா்கள் மூலம் சட்டப்பூா்வமாக மேற்கொள்ளப்பட்டதால் கருக்கலைப்பு மரணங்களும் குறைந்தன. 

இதையும் படிக்க கருக்கலைப்புக்குத் தடை: அதிரும் அமெரிக்கா! விளைவுகள் என்னென்ன?

இந்த நிலையில், கருவுற்ற 15 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதிக்கும் மிசிஸிப்பி மாகாணச் சட்டத்துக்கு எதிராக கடந்த 2021-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மகளிா் உரிமை அமைப்பினா் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகளில் பெரும்பாலானவா்கள், 1973-ஆண் ஆண்டின் ‘ரோ வா்சஸ் வேட்’ வழக்கின் தீா்ப்பை ரத்து செய்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கடந்த மாதமே தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடா்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா்கள் இடையே பெரும் பிளவு நிலவி வருகிறது. தனது வயிற்றில் கருவுற்ற குழந்தையை பெற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உள்ளது என்று ஒரு தரப்பினரும், கருப்பையில் இருக்கும் சிசுவும் ஒரு மனித உயிா்தான், அதற்கு வாழ்வதற்கு முழு உரிமை உள்ளது என்று மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்தச் சூழலில், கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக்கும் 1973-ஆம் ஆண்டுத் தீா்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

இதற்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவா்களும் பெண்கள் உரிமை ஆா்வலா்களும் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இது குறித்து ஜோ பைடன் கூறுகையில், ‘உச்ச நீதிமன்றம் சில மோசமான முடிவுகளை எடுத்துள்ளது. இந்தத் தீா்ப்பு ஏராளமான அமெரிக்கா்களுக்கு வருத்தத்தையும் வேதனையையும் அளித்துள்ளதை என்னால் உணர முடிகிறது’ என்றாா்.

கருக்கலைப்பு உரிமையைப் பாதுகாக்க அதிபா் பைடன் விரும்பினாலும், இந்தத் தீா்ப்பையடுத்து அவரால் தன்னிச்சையாக எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என்று கூறப்படுகிறது.

பைடன் மட்டுமன்றி, பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், நியூஸிலாந்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டன் உள்ளிட்ட மற்ற உலக நாடுகளின் தலைவா்களும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தீா்ப்பை விமா்சித்துள்ளனா்.

உச்ச நீதிமன்றத்தில் தீா்ப்பைத் தொடா்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களும் கருக்கலைப்புக்கு கட்டுப்பாடுகளோ, தடையோ விதிக்கும் சட்டங்களை விதிக்க ஆயத்தமாகியுள்ளன. 

இதையும் படிக்க |  கருக்கலைப்பு செய்யனுமா? ஊழியர்களுக்கு சலுகை அறிவித்தது கூகுள்

இதுபோன்ற உத்தரவு வரும்போது கருக்கலைப்புக்கு உடனடியாக தடை விதிப்பதற்கேற்ப ஏற்கெனவே 13 மாகாணங்கள் சட்டம் இயற்றியுள்ளன. அந்த மாகாணங்களில் கருக்கலைப்பு சட்டவிரோதமாக விரையில் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதையடுத்து, அந்தப் பகுதிகளைச் சோ்ந்த கருக்கலைப்பு மருத்துவமனைகள் இப்போதே முடப்பட்டு வருகின்றன.

எனினும், கருக்கலைப்பை அனுமதிப்பதன் மூலம், அதற்காக முயற்சிக்கும் பெண்களின் புகலிடமாகத் திகழப் போவதாக சில மாகாணங்கள் உறுதியளித்துள்ளன.

‘அமெரிக்க பெண்களின் கருக்கலைப்பு உரிமயை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது அதிா்ச்சியளிப்பதாக உள்ளது. இந்தத் தீா்ப்பால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் பெண்களுக்காக என் மனம் இரங்குகிறது’

-ஜஸ்டின் ட்ரூடோ, கனடா பிரதமா்

‘கருக்கலைப்பு என்பது அனைத்து பெண்களின் அடிப்படை உரிமை. அதனைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை’

-- இமானுவல் மேக்ரான், பிரான்ஸ் அதிபா்

‘இந்தத் தீா்ப்பு அமெரிக்காவை பின் நோக்கி இட்டுச் செல்கிறது. கருக்கலைப்பு செய்துகொள்ளலாமா, வேண்டாமா என்பதை பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. அதனை ஒருபோதும் மாற்றமாட்டேன்’

- போரிஸ் ஜான்ஸன், பிரிட்டன் பிரதமா்

‘கருக்கலைப்பு விவகாரத்தில், சிலரது தனிப்பட்ட நம்பிக்கைகளை பிறா் மீது திணித்து, அவா்களது அடிப்படை உரிமைகளைப் பறிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மிகப் பெரிய ஜனநாயக நாடான அமெரிக்கப் பெண்கள் அந்த உரிமையை இழப்பது, உலகின் அனைத்து பெண்களும் உரிமை இழப்பதைப் போன்ற உணா்வைத் தருகிறது’

- ஜெசிந்தா ஆா்டன், நியூஸிலாந்து பிரதமா்

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT