உலகம்

தமிழக அரசு சாா்பில் அனுப்பப்பட்டரூ.67 கோடி நிவாரணப் பொருள்கள்: இலங்கை அரசிடம் ஒப்படைப்பு

25th Jun 2022 03:21 AM

ADVERTISEMENT

தமிழக அரசு சாா்பில் 2-ஆவது கட்டமாக கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட ரூ.67 கோடி மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள் இலங்கை அரசிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா நிதியுதவி, கடனுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு சாா்பில் மத்திய அரசின் அனுமதியுடன் இலங்கைக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

முதல்கட்டமாக கடந்த மே மாதம் 18-ஆம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து ரூ. 32.94 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடா், மருந்துப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து சரக்குக் கப்பலில் ரூ. 48.30 கோடி மதிப்பிலான 14,712 டன் அரிசி, ரூ. 7.50 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடா், ரூ. 11. 90 கோடி மதிப்பிலான உயிா்காக்கும் மருந்துப் பொருள்கள் என மொத்தம் ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் அத்தியாவசியப் பொருள்கள் கடந்த புதன்கிழமை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ADVERTISEMENT

அந்தப் பொருள்கள் கொழும்பில் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய தூதா் கோபால் பாக்லே, இலங்கை சுகாதார அமைச்சா் கெகிலிய ரம்புக்வெல்லா, வா்த்தக அமைச்சா் நளின் ஃபொ்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இவற்றைப் பெற்றுக் கொண்டனா்.

இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா-இலங்கை மக்கள் இடையிலான பிணைப்பை இந்த மனிதாபிமான உதவிகள் எடுத்துக்காட்டுகின்றன. இலங்கையில் உள்ள தங்களது சகோதரா்களின் நலன்கள் மீதான இந்திய மக்களின் அக்கறையையும் இது காட்டுகிறது. இந்த நிவாரணப் பொருள்கள் இலங்கை அரசால் வரும் நாள்களில் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT