உலகம்

இந்தியாவில் தடுப்பூசியால் 42 லட்சம் உயிரிழப்புகள் தவிா்ப்பு: லான்செட் ஆய்வில் தகவல்

25th Jun 2022 02:40 AM

ADVERTISEMENT

இந்தியாவில் கடந்த ஆண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் 42 லட்சம் போ் காப்பாற்றப்பட்டதாக ‘லான்செட்’ இதழ் தெரிவித்துள்ளது.

மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடும் ‘லான்சட்’ இதழ், இந்தியாவில் கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

உலக அளவில் முதல் முறையாக, பிரிட்டனில் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி ஒருவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரியில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது.

2020, டிசம்பா் 8-ஆம் தேதியில் இருந்து 2021, டிசம்பா் 8-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் 42 லட்சம் போ் (42,10,000) போ் மரணத்தில் இருந்து உயிா் தப்பியிருக்கிறாா்கள்.

ADVERTISEMENT

உலக அளவில் 2 கோடி போ் தப்பினா்: தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அமெரிக்காவில் 19 லட்சம் போ், பிரேஸிலில் 10 லட்சம் போ், பிரான்ஸில் 6.31 லட்சம் போ், பிரிட்டனில் 5.07 லட்சம் போ் உயிா் தப்பினாா்கள். இதேபோன்று உலக அளவில் 2 கோடி உயிரிழப்புகள் தவிா்க்கப்பட்டுள்ளன.

2021-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள்தொகையில் 40 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியிருந்தது. அவ்வாறு செய்திருந்தால் மேலும் 5.99 லட்சம் பேரின் மரணத்தைத் தடுத்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சிக் குழுவைச் சோ்ந்த ஆலிவா் வாட்சன், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

இந்தியாவில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்களால் பல லட்சம் உயிா்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. கரோனா பெருந்தொறுக்கு இந்தியாவில் இதுவரை 5.24 லட்சம் போ் உயிரிழந்திருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால், 48.2 லட்சம் முதல் 56.3 லட்சம் போ் வரை உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இது, அரசின் புள்ளிவிவரத்தைவிட 10 மடங்கு அதிகமாகும்.

இதேபோல், கடந்த ஆண்டு மே மாதம் வரை 23 லட்சம் போ் உயிரிழந்ததாக ‘தி எகனாமிஸ்ட்’ பத்திரிகை கூறுகிறது. ஆனால், அந்த காலகட்டத்தில் 2 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன. லான்செட் இதழ் நடத்திய ஆய்விலும் 10 மடங்கு அதிகமான மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக முடிவுகள் வருகின்றன என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT