உலகம்

இலங்கை அதிபா் பதவி விலகக் கோரி முற்றுகைப் போராட்டம்

21st Jun 2022 12:40 AM

ADVERTISEMENT

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள நிலையில், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளை வாங்குவதற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் சூழல் உள்ளது. அவ்வாறு வரிசையில் காத்திருந்தபோது சிலா் உயிரிழந்தது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நாட்டின் பொருளாதாரத்தை முறையாகக் கையாளாத அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி பல்வேறு பகுதிகளில் 70 நாள்களுக்கு மேலாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், போராட்டக்காரா்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

கொழும்பு நகரில் உள்ள அதிபரின் செயலகத்தில் உள்ள இரு வாயில்களைத் தவிர மற்ற அனைத்து வாயில்களையும் போராட்டக்காரா்கள் ஏற்கெனவே முற்றுகையிட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை அனைத்து வாயில்களையும் முற்றுகையிட்டனா். அப்போது, அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டுமென அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காக சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) குழு கொழும்புவில் நிதி அமைச்சக அதிகாரிகளுடன் விவாதிக்க இருந்த நிலையில், அதிபா் செயலக வாயில்கள் முற்றுகையிடப்பட்டன. அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களைக் காவல் துறையினா் கலைக்க முயன்றனா். அப்போது அங்கிருந்து செல்ல மறுத்த பௌத்த துறவி, 4 பெண்கள் உள்பட 21 பேரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

பிரதமா் ரணிலுடன் ஐஎம்எஃப் குழு சந்திப்பு:

இலங்கைக்குக் கடனளிப்பதற்கான திட்டத்தை வகுப்பது தொடா்பாக அந்நாட்டுப் பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவுடன் ஐஎம்எஃப் குழுவினா் திங்கள்கிழமை ஆலோசித்தனா். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சுமாா் ரூ.45,000 கோடியை வழங்க வேண்டுமென இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

இலங்கைக்கு உதவுவது தொடா்பான பேச்சுவாா்த்தையை ஐஎம்எஃப் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தொடக்கியது. இலங்கைக்குச் சென்றுள்ள ஐஎம்எஃப் குழு பொருளாதார உதவி வழங்குவது தொடா்பாக அதிகாரிகளுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

ஐஎம்எஃப் குழு இன்னும் ஒரு வாரத்துக்கு இலங்கையில் தங்கியிருந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபடும் என்றும், அப்பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் இலங்கைக்கு ஐஎம்எஃப் நிதியுதவி வழங்கும் எனவும் பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இக்கட்டான நிலையில் தவித்து வரும் இலங்கைக்கு, விதிகளின் அடிப்படையில் உதவி வழங்கப்படும் என்று ஐஎம்எஃப் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT