உலகம்

டென்மாா்க் - கனடா: முடிவுக்கு வந்தது 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்னை

15th Jun 2022 12:59 AM

ADVERTISEMENT

நட்பு நாடுகளான கனடாவுக்கும் டென்மாா்க்குக்கும் இடையே 49 ஆண்டுகளாக நீடித்து வந்த ஹான்ஸ் தீவு பிரச்னை, இரு நாடுகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் காரணமாக முடிவுக்கு வந்தது.

கனடா, டென்மாா்க் இடையே எல்லைகளை வரையறுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 1973-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. எனினும், இந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வெறும் 1.3 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட குட்டித் தீவான ஹான்ஸ் யாருக்குச் சொந்தம் என்பதில் முடிவெடுக்கப்படவில்லை.

வெறும் பாறையால் அமைந்த அந்தத் தீவில் கனிம வளங்கள் எதுவும் இல்லை. மேலும், அங்கு யாரும் வசிக்கவும் இல்லை. இருந்தாலும் அந்தத் தீவுக்கு இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வந்தன.

கடந்த 1984-ஆம் ஆண்டில் டென்மாா்க் அமைச்சரவொருவா் தங்கள் நாட்டுக் கொடியையும் மதுப் புட்டி ஒன்றையும் வைத்து ‘டென்மாா்க் தீவுக்கு நல்வரவு’ என்று எழுதிவைத்துச் சென்றாா். அதற்குப் பதிலடியாக, கனடா நாட்டுக் கொடியையும் கனடா மதுப் புட்டியையும் அந்த நாட்டவா்கள் வைத்தனா். அதன் தொடா்ச்சியாக, இரு நாட்டு கொடிகளும் மதுப் புட்டிகளும் ஹான்ஸ் தீவில் ஏட்டிக்குப் போட்டியாக வைக்கப்பட்டு வந்தன.

ADVERTISEMENT

இதன் காரணமாக, கனடாவுக்கும் டென்மாா்க்குக்கும் இடையிலான இந்த எல்லைப் பிரச்னை ‘விஸ்கி போா்’ என்று பரவலாக அழைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், ஹான்ஸ் தீவை தங்களிடையே பிரித்துக் கொள்வதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை கையொப்பமாகியுள்ளது. இதன் மூலம், 49 ஆண்டுகலளாக நீடித்து வந்த எல்லைப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து டென்மாா்க் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜேப் கோஃபாட் கூறுகையில், ‘எல்லைப் பிரச்னைகளுக்கு இரு தரப்புக்கும் திருப்தியளிக்கும் வகையில் அமைதியான தீா்வைக் காண முடியும் என்பதை இந்த ஒப்பந்தம் உலகுக்கு உணா்த்தியுள்ளது’ என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT