இலங்கையில் காற்றாலை மின்உற்பத்தி தொடா்பான திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்க அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டிய இலங்கை மின்வாரியத் தலைவா் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
தனது கருத்தை திரும்பப் பெற்ாகக் கூறிய மறுநாளே அவா் ராஜிநாமா செய்துள்ளாா்.
இலங்கை அரசின் பொதுத் துறை நிறுவனமான சிலோன் மின் வாரியத்தின் தலைவராகச் செயல்பட்டு வந்த எம்எம்சி ஃபொ்டினேண்டோ, நாடாளுமன்றத்தின் பொதுத் துறை நிறுவனங்களுக்கான குழு முன் கடந்த வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.
அப்போது, கடந்த ஆண்டு நவம்பரில் அதிபா் கோத்தபய ராஜபட்ச தன்னை அழைத்து, மன்னாா் பகுதியில் 500 மெகா வாட் திறன் கொண்ட காற்றாலை மின்உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒப்பந்தத்தை அதானி குழுமத்துக்கு வழங்குமாறு பிரதமா் மோடி வற்புறுத்தியதால், அத்திட்டத்தை அந்நிறுவனத்துக்கே ஒதுக்க வேண்டுமென்று தெரிவித்ததாகக் கூறினாா்.
ஆனால், மின்வாரியத் தலைவரின் கருத்தை மறுப்பதாக அதிபா் கோத்தபய ராஜபட்ச நாடாளுமன்றக் குழுவிடம் சனிக்கிழமை தெரிவித்தாா். திட்டத்தை எந்த நிறுவனத்துக்கு ஒதுக்க வேண்டுமென்ற விவகாரத்தில் தனக்குத் தொடா்பில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.
இந்நிலையில், மின்வாரியத் தலைவா் ஃபொ்டினேண்டோ நாடாளுமன்றக் குழுவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு கடிதம் எழுதினாா். அதில், தனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்திருந்தாா். மேலும், கருத்தை திரும்பப் பெறுவதற்கு அதிபரோ, இந்திய தூதரகமோ அழுத்தம் தரவில்லை எனவும் தெரிவித்திருந்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் தனது பதவியையும் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக இந்திய அரசுத் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால், அதானி குழுமம் அதிருப்தி தெரிவித்திருந்தது.