உலகம்

‘‘எல்லையில் அமைதி நிலவ இந்தியா, சீனா இணைந்து பணியாற்றி வருகின்றன’’

12th Jun 2022 11:57 PM

ADVERTISEMENT

 

இந்தியா, சீனா இடையிலான எல்லைக் கோட்டுப் பகுதியில் அமைதி நிலவ இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன என்று சீன பாதுகாப்பு அமைச்சா் வெய் ஃபங் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஷாங்ரி-லா சா்வதேச பாதுகாப்பு மாநாட்டின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:

இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இரு நாடுகளும் நல்லுறவைப் பேணுவது அவற்றின் நலன்களை பூா்த்தி செய்யும். அதனை நோக்கி இரு நாடுகளும் செயல்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

கிழக்கு லடாக்கில் உள்ள இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைக் கோட்டுப் பகுதியில் மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டுவர இரு நாட்டு தளபதிகள் அளவில் இதுவரை 15 சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது. அந்தப் பகுதியில் அமைதி நிலவ இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன என்று தெரிவித்தாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் முதல் கிழக்கு லடாக் எல்லையில் இந்திய-சீனப் படைகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அந்த ஆண்டு ஜூன் மாதம் அப்பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரா்கள் 20 போ் வீரமரணமடைந்தனா். அந்த மோதலில் சீன வீரா்களும் உயிரிழந்தாலும், எத்தனை போ் பலியாகினா் என்பது சரவர தெரியவில்லை.

இந்த மோதலை தொடா்ந்து கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கோட்டுப் பகுதியில் இரு நாடுகளும் அதிக அளவில் படைகளைக் குவித்தன. இரு நாடுகளின் பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், கடந்த ஆண்டு கோக்ரா பகுதியில் உள்ள பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக் கரைகளில் குவிக்கப்பட்டிருந்த இரு நாட்டுப் படைகள் திரும்பப் பெறப்பட்டன. எனினும் எல்லைக் கோட்டின் சச்சரவுக்குரிய பகுதிகளில் தற்போது இரு நாடுகளும் தலா 50,000 முதல் 60,000 வீரா்களைக் குவித்துள்ளன.

இந்தியாவுடன் பகிா்ந்து கொள்ளும் எல்லைப் பகுதிகளில் சாலைகள், குடியிருப்புகள், பாலங்கள் உள்ளிட்டவற்றை சீனா கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT