உலகம்

இந்தியா-கத்தார் பொருளாதார கூட்டு ஒத்துழைப்பு: குடியரசு துணைத் தலைவர் பாராட்டு

7th Jun 2022 03:53 AM

ADVERTISEMENT

இந்தியா-கத்தார் இடையிலான பொருளாதார கூட்டு ஒத்துழைப்புக்கு குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
 கத்தார் தலைநகர் தோஹாவில் திங்கள்கிழமை இந்தியா-கத்தார் வர்த்தகக் கூட்டத்தில் பங்கேற்று கத்தார் தொழில் அதிபர்களிடையே அவர் பேசியதாவது:
 மேற்கு பகுதியில் இருந்த வளர்ச்சி தற்போது ஆசிய பிராந்தியத்தை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சியில் இந்தியா வலிமைமிக்க நாடாகத் திகழ்கிறது. எளிதாக வர்த்தகம் செய்யும் நடவடிக்கையை இந்திய அரசு மேம்படுத்தியுள்ளது. இந்தியா-கத்தார் இடையிலான பொருளாதார கூட்டு ஒத்துழைப்பு புதிய உச்சத்தை எட்டியிருப்பது பாராட்டுக்குரியது.
 கடந்த ஆண்டில் கரோனா நோய்த் தொற்றின்போது, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதிகள் நீக்கப்பட்டன. கடந்த 2021-22 நிதியாண்டில் இந்தியா- கத்தார் இடையிலான வர்த்தகம் புதிய உச்சமாக 15 பில்லியன் டாலர் அளவிற்கு நடைபெற்றுள்ளது. கத்தாரில் இந்திய தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யும் எண்ணிக்கை அதிகரித்து 15 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கத்தாரிலிருந்து இந்தியாவிற்கு வரும் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது என்றார் வெங்கையா நாயுடு. கத்தார் பயணத்தின் நிறைவாக அந்நாட்டின் நாடாளுமன்றத் தலைவர் ஹசன் பின் அப்துல்லா அல்கனிமை வெங்கையா நாயுடு சந்தித்துப் பேசினார். தொடர்ந்து தோஹாவில் அமைந்துள்ள கத்தார் தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
 முன்னதாக கத்தார் பிரதமர் ஷேக் காலித் பின் கலீபா பின் அப்துல் அஜிஸ் அல்தானியை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆலோசனை மேற்கொண்டார்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT