உலகம்

8 ஏவுகணைகளை செலுத்திதென்கொரியா-அமெரிக்கா பயிற்சி: வடகொரியாவுக்கு பதிலடி

7th Jun 2022 12:36 AM

ADVERTISEMENT

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து 8 பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி பயிற்சியில் ஈடுபட்டன.

கரோனா பரவல், பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே வடகொரியா தொடா்ந்து ஏவுகணைகளை செலுத்தி சோதனை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அந்த நாடு செலுத்தியது. சுமாா் 35 நிமிஷ இடைவெளியில் 4 இடங்களிலிருந்து இந்த ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. ஒரே நாளில் 8 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா செலுத்தியது இதுவே முதல்முறை. நிகழாண்டு மட்டும் 18 முறை ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது.

இந்நிலையில், வடகொரியாவுக்கு பதிலடியாக அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து 8 ஏவுகணைகளை செலுத்தி திங்கள்கிழமை பயிற்சியில் ஈடுபட்டன. பாலிஸ்டிக் ஏவுகணைகளான இவற்றில் தென்கொரியாவுக்குச் சொந்தமான ஏழு ஏவுகணைகளும், அமெரிக்காவின் ஓா் ஏவுகணையும் அடங்கும். தென்கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்தது.

வடகொரியா 2017-ஆம் ஆண்டிலிருந்தே தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நடத்த தயாராகி வருவதாக தென் கொரியாவும், அமெரிக்காவும் கூறி வருகின்றன. இதுகுறித்து திங்கள்கிழமை நடைபெற்ற போா் நினைவு தின நிகழ்ச்சியில் பேசிய தென்கொரிய அதிபா் யூன் சுக் இயோல், ‘வடகொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் வளா்ச்சியடைந்து வருவது கொரிய தீபகற்பத்துக்கு மட்டுமின்றி, வடகிழக்கு ஆசியா மற்றும் உலக அமைதிக்கும் அச்சுறுத்தலாகும். வடகொரியாவின் எந்த வகையான அத்துமீறலுக்கும் தென்கொரியா பதிலடி கொடுக்கும்’ என்றாா்.

ADVERTISEMENT

 

Tags : missiles
ADVERTISEMENT
ADVERTISEMENT