உலகம்

நைஜீரிய தேவாலய தாக்குதல்: நேரில் பாா்த்தவா்கள் உருக்கம்

7th Jun 2022 12:50 AM

ADVERTISEMENT

நைஜீரிய தேவாலயத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய வேளையில், அங்கிருந்து தப்பி வருபவா்களைக் கொல்வதற்காக தேவாலயத்தின் வெளியேயும் பயங்கரவாதிகள் காத்திருந்ததாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் ஓன்டோ மாகாணத்தில் உள்ள செயின்ட் ஃபிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தேவாலயத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டதில் ஆண்கள், பெண்கள், சிறாா்கள் என சுமாா் 50 போ் உயிரிழந்தனா். ஏராளமானோா் காயமடைந்தனா்.

இந்த சம்பவத்தை நேரில் பாா்த்த ஸ்டீவன் ஒமோடயோ என்பவா் கூறுகையில், தேவாலயத்தின் வாயிலிலிருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். ஆலயத்தில் மூன்று வாயில்கள் உள்ளன. அவற்றில் பிரதான வாயிற்கதவு மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் வெளியே தப்பிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது’ என்றாா்.

‘ஆலயத்தில் இருந்து தப்பி வெளியே ஓடி வருபவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்காக வெளியேயும் பயங்கரவாதிகள் காத்திருந்ததாக’ ஆலய பணியாளா்களும் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

மருத்துவமனையில் ஒரே நேரத்தில் ஏராளமானோா் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டதால், அவா்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை பணியாளா்கள் திணறினா். மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்தம் தீா்ந்ததால், ரத்தத்தைப் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தாக்குதல் நடந்த ஓன்டோ மாகாணம் நாட்டின் தென்மேற்கில் உள்ளது. வடக்கு நைஜீரியாவில் 13 ஆண்டுகளாக பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில், ஓன்டோ மாகாணம் ஓரளவு அமைதியாகவே இருந்து வந்தது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Tags : Nigeria
ADVERTISEMENT
ADVERTISEMENT