உலகம்

பாகிஸ்தான் ராணுவத்தால் மிரட்டப்பட்டேன்...பகீர் கிளப்பும் இம்ரான் கான்

2nd Jun 2022 02:34 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானை பொருத்தவரை மிகவும் வலிமையான அமைப்பாக ராணுவம் விளங்கும் நிலையில், அதை கடுமையாக விமர்சித்து அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். தனது அரசு பலவீனமாக இருந்ததாகவும் அனைத்து முனைகளில் இருந்தும் மிரட்டலுக்குள்ளானதாகவும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

தன்னிடம் அதிகாரம் இருக்கவில்லை என்றும் அது எங்கு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் ராணுவத்தை மறைமுகமாக சாடியுள்ளார்.

கடந்த மாதம், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததையடுத்து இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். ரஷியா, சீனா, பாகிஸ்தான் போன்ற வெளிநாட்டு விவகாரங்களில் சுதந்திரமான வெளியுறவு கொள்கையை பின்பற்றியதால் அமெரிக்காவின் சதியின் காரணமாக தான் தோற்கடிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.  

பாகிஸ்தானின் போல் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட இரவன்று என்னவெல்லாம் நடந்தது என்பது குறித்து அவர் விளக்கியுள்ளார். முன்னதாக, பிரதமராக பொறுப்பு வகித்தபோது, பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "எனது கைகள் கட்டப்பட்டன. அனைத்து முனைகளில் இருந்தும் மிரட்டப்பட்டோம். எங்களிடம் அதிகாரம் இல்லை. பாகிஸ்தானில் யாரிடம் அதிகாரம் இருக்கிறது என அனைவருக்கும் தெரியும். எனவே, அவர்களை சார்ந்து இருக்க வேண்டியதாயிற்று" என யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "எதிரிகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் வரும் என்பதால் ஒரு நாட்டுக்கு வலிமையான ராணுவம் இருப்பது மிக முக்கியம். இருப்பினும், வலிமையான ராணுவம் மற்றும் வலிமையான அரசுக்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும். அவர்களை நம்பியே எப்போதும் இருந்தோம். நிறைய நல்ல செயல்களை அவர்கள் செய்தார்கள். 

ஆனால், செய்ய வேண்டிய பலவற்றை அவர்கள் செய்யவில்லை. தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் போன்ற நிறுவனங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவர்களிடமே அதிகாரம் இருந்தது. எங்களிடம் இல்லை. என் அரசுக்கு பொறுப்பு இருந்தாலும் அதிகாரமும் இல்லை" என்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு, ராணுவத்தின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்ததாகக் கூறப்படும் இம்ரான் கான், அந்நாட்டு வரலாற்றிலேயே நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் தோற்கடிக்கப்பட்ட ஒரே பிரதமர் ஆவார்.

பாகிஸ்தானின் 73 ஆண்டு கால வரலாற்றில், பாதிக்கும் மேலாக அந்நாட்டு ராணுவம் தான் அங்கு ஆட்சி நடத்தியது. பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை போன்ற விவகாரங்களில் குறிப்பிடத்தகுந்த அதிகாரம் ராணுவத்திடமே உள்ளது. ஆனால், அரசியல் விவகாரங்களில் ஈடுபடுவதில்லை என ராணுவம் தொடர்ந்து மறுத்து வருகிறது. 
 

Tags : imran khan
ADVERTISEMENT
ADVERTISEMENT