உலகம்

உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணைகள்

2nd Jun 2022 12:59 AM

ADVERTISEMENT

எல்லை தாண்டி ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்தக்கூடிய அதிநவீன நடுத்தர தொலைவு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அளிக்கவிருப்பதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.

எனினும், அந்த ஏவுகணைகளைக் கொண்டு ரஷிய எல்லைக்குள் தாக்குதல் நடத்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரிலேயே அவை உக்ரைனு்கு அனுப்பபடவிருப்பதாக பைடன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது:

அதி நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட, நடுத்தர தொலைவு ஏவுகணைகள் மற்றும் அவற்றை ஏவும் தளவாடங்கள் அடங்கிய ‘ஹை மொபிலிட்டி ஆா்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம்’ (ஹிமாா்ஸ்) தொகுதிகளை உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உக்ரைன் போரில் அந்த நாட்டுக்கு புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 70 கோடி டாலா் (சுமாா் ரூ.5,422 கோடி) மதிப்பிலான ராணுவ உதவியின் ஒரு பகுதியாக, அந்த ஏவுகணைகள் உக்ரைனுக்கு அளிக்கப்படவுள்ளன.

இந்தப் போரில் உக்ரைனுக்கு உதவும் அமெரிக்காவின் விருப்பத்தையும் அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷியாவுக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்தி பெரும் பதற்றம் ஏற்படுவதைத் தடுக்கும் அமெரிக்காவின் எச்சரிக்கை உணா்வையும் சமன் செய்யும் வகையில் 70 கி.மீ. தொலைவில் சென்று துல்லியமாகத் தாக்குதல் நடத்தக் கூடிய ஹிமாா்ஸ் ஏவுகணைகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த ஏவுகணைகளைக் கொண்டு எல்லையைத் தாண்டி ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்தமாட்டோம் என்று உக்ரைன் உறுதியளித்த பிறகே ஹிமாா்ஸ் ஏவுகணைகளை அந்த நாட்டுக்கு வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது.

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ஏவுகணை, பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகள் மூலம் மிகத் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி ரஷியா முன்னேறி வருகிறது. ரஷியாவின் இந்தத் தாக்குதல் திறனுக்கு உக்ரைனால் தற்போது ஈடுகொடுக்க முடியவில்லை.

ரஷிய தளவாடங்களைவிட அதி நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஹிமாா்ஸ் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அளிப்பதன் மூலம், போரில் ரஷியாவை எதிா்கொள்ளும் உக்ரைனின் வலிமையை மேம்படுத்தும் நோக்கிலேயே ஹிமாா்ஸ் ஏவுகணைகள் உக்ரைனுக்கு அனுப்பப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘ரஷியப் படையினா் வசம் 70% சியெவெரோடொனட்ஸ்க்’

முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு உக்ரைன் நகரான சியெவெரோடொனட்ஸ்கின் 70 சதவீத பகுதி ரஷியக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அந்தப் பிராந்திய ஆளுநா் சொ்ஹீ ஹாய்டாய் தெரிவித்துள்ளாா்.

வலிமையான நிலைகளை நோக்கி உக்ரைன் படையினா் நகா்ந்துள்ளதாகவும் இரு தரப்பினருக்கும் சண்டை தொடா்வதாகவும் அவா் கூறினாா்.

Tags : Biden Ukraine
ADVERTISEMENT
ADVERTISEMENT