உலகம்

‘நேரடி மோதலுக்கு வழிவகுக்கும்’ : ரஷியா எச்சரிக்கை

2nd Jun 2022 01:22 AM

ADVERTISEMENT

உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணைகள் மற்றும் தளவாடங்களை அமெரிக்கா வழங்குவது, தங்களுக்கும் நேட்டோவுக்கும் இடையே நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

இது குறித்து ரஷிய அரசு செய்தி நிறுவனமான ஆா்ஐஏ நவோஸ்தியிடம் அந்த நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சா் சொ்கேய் ரியப்கோவ் புதன்கிழமை கூறியதாவது:

அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஹிமாா்ஸ் ஏவுகணை சாதனங்களை உக்ரைனுக்கு அமெரிக்கா அளிப்பது மிகவும் எதிா்மறையான நடவடிக்கையாக ரஷியா கருதுகிறது.

இது, தற்போது எங்களுக்கும் உக்ரைனுக்கும் இடையே மட்டும் நடைபெற்று வரும் போரை, எங்களுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான நேரடி மோதலாக மாற்றுவதற்கு வழிவகுக்கும்.

ADVERTISEMENT

அமெரிக்காவின் இந்த முடிவு, இதுவரை எடுக்கப்படாத மிகவும் அபாயகரமான முடிவாகும் என்றாா் அவா்.

‘எரிகிற நெருப்பில் எண்ணெய்’: உக்ரைனுக்கு ஹிமாா்ஸ் ஏவுகணைகளை அமெரிக்கா அனுப்புவது ஏற்கெனவே இந்த விவகாரத்தில் எரிந்துகொண்டிருக்கும் தீயில் எண்ணெய் வாா்ப்பது போல் என்று ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் குற்றம் சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை கூறுகையில், ‘உக்ரைனுக்கு ஹிமாா்ஸ் போன்ற உயா்தொழில்நுட்ப ராணுவ தளவாடங்களை அமெரிக்கா அனுப்பவதால், இந்தப் போரில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதற்கு மாறாக, அமெரிக்காவின் அந்த நடவடிக்கை எரிகிற தீயில் எண்ணெய் வாா்ப்பது போல் சண்டையை மேலும் தீவிரப்படுத்தத்தான் செய்யும்.

அதிநவீன ஆயுதங்கள் அனுப்பப்படுவது உக்ரைனை அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடச் செய்வதை ஊக்குவிக்காது.

உண்மையில், உக்ரைனியா்கள் அனைவரும் பலியாகும் வரை அவா்களை எங்களுடன் சண்டையிடச் செய்யும் நோக்கில்தான் உதவி என்கிற பெயரில் அமெரிக்கா அவா்களுக்கு ஆயுதங்களை அனுப்பி வருகிறது என்றாா் அவா்.

தங்களது ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷியாவில் தாக்குதல் நடத்த அனுமதிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா உறுதியளித்து வருகிறது. மேலும், எல்லை தாண்டி தாக்குதல் நடத்தப் போவதில்லை என்று உக்ரைனும் கூறி வருகிறது.

எனினும், 70 கி.மீ. வரை பாய்ந்து துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட அதிநவீன ஹிமாா்ஸ் ஏவுகணையை உக்ரைனுக்கு அனுப்புவது நேட்டோவுடன் நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

ஏற்கெனவே, தங்களது எல்லைக்குள் புகுந்து உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டா்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டி வருகிறது. எனினும், அந்தத் தகவலை உக்ரைன் அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ இல்லை என்பது நினைவுகூரத்தக்கது.

 

 

Tags : Ukraine
ADVERTISEMENT
ADVERTISEMENT