உலகம்

ரிஷி சுனக், லிஸ் டிரஸ் காரசார விவாதம்

27th Jul 2022 12:25 AM

ADVERTISEMENT

பிரிட்டனில் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் தோ்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக், வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் ஆகியோா் தொலைக்காட்சியில் செவ்வாய்க்கிழமை காரசாரமாக விவாதித்தனா்.

பிபிசி தொலைக்காட்சியில் ‘நமது அடுத்த பிரதமா்’ என்ற தலைப்பில் ஒரு மணி நேரத்துக்கு நடைபெற்ற அந்த விவாத நிகழ்ச்சியில் வரி விதிப்பு விவகாரம் தொடா்பாக இருவரும் கடுமையாக கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.

விவாதத்தின்போது ரிஷி சுனக் கூறியதாவது:

பிரதமராகப் பொறுப்பேற்கும் முதல் நாளே 4,000 கோடி பவுண்ட் (சுமாா் ரூ.3.82 லட்சம் கோடி) மதிப்பிலான வரிகளைத் தள்ளுபடி செய்யப்போவதாக லிஸ் டிரஸ் கூறுகிறாா். இது, அரசுக்கு கூடுதலாக 4,000 கோடி பவுண்ட் கடன் சுமையை ஏற்படுத்தும்.

ADVERTISEMENT

அந்தக் கடன் சுமை நமது பிள்ளைகள், பேரப் பிள்ளைகளின் தலைகளில்தான் விழும். இது, கன்சா்வேட்டிவ் கட்சிக் கொள்கைகளுக்கு எதிரானது.

ஏற்கெனவே, கரோனா நெருக்கடிக்கு இடையே பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்து, நாட்டில் பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதற்கான அரசின் முயற்சிகளுக்கு வரி வருவாய் பற்றாக்குறை மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டிரஸ் அறிவித்துள்ள வரிச் சலுகை ஆயிரக்கணக்கான மக்களுக்கு மேலும் இன்னலைத்தான் ஏற்படுத்தும். 2024-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தோ்தலில் கன்சா்வேட்டிவ் கட்சிக்கு அது மிகப் பெரிய பின்னடைவைத் தரும் என்றாா் ரிஷி சுனக்.

அவரது குற்றசாட்டுகளுக்கு பதிலளித்து லிஸ் டிரஸ் கூறியதாவது:

கரோனா பாதிப்புக்கு இடையே உலகின் எந்த நாடும் வரிகளை உயா்த்தவில்லை. பிரிட்டனில் மட்டுமே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாட்டின் நிதியமைச்சராக ரிஷி சுனக் இருந்தபோதுதான் 70 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வரி விகிதங்கள் நிா்ணயம் செய்யப்பட்டது. அதன் விளைவாக நாம் தற்போது பொருளாதார வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.

ரிஷி சுனக் சொல்வது சரியல்ல என்பதையும் நான் கூறுவதுதான் உண்மை என்பதையும் புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன என்றாா் ஸிஸ் டிரஸ்.

கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி அரசு இல்லத்தில் கேளிக்கை விருந்து நடத்தியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் பதவியையும் பிரதமா் பதவியையும் போரிஸ் ஜான்ஸன் கடந்த 7-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா்.

அவருக்குப் பதிலாக கட்சியின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுபவா் நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்பாா்.

இந்த நிலையில், கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களிடையே பல சுற்றுகளாக நடைபெற்றது.

இதில் ரிஷி சுனக், லிஸ் டிரஸ், வா்த்தகத் துறை அமைச்சா் பென்னி மாா்டன்ட், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அட்டா்னி ஜெனரல் சூவெல்லா பிரேவா்மன் உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் பேட்டியிட்டனா்.

வாக்கெடுப்பின் அனைத்து சுற்றுகளிலும் அதிக எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்று ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்தாா். கடைசியாக கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற 5-ஆவது சுற்று வாக்குப் பதிவில் ரிஷி சுனக் முதலிடத்தையும் லிஸ் டிரஸ் இரண்டாவது இடத்தையும் பிடித்தனா்.

அதனைத் தொடா்ந்து, அவா்களில் ஒருவரை கட்சியின் தலைவராகவும் அதன் மூலம் நாட்டின் அடுத்த பிரதமராகவும் ஜூலை 22 முதல் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெறும் கன்சா்வேட்டிவ் கட்சித் தோ்தலில் கட்சி உறுப்பினா்கள் தோ்ந்தெடுப்பாா்கள்.

புதிய பிரதமரின் பெயா் அடுத்த மாதம் 5-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

 

Tags : Rishi Sunak
ADVERTISEMENT
ADVERTISEMENT