உலகம்

அமைச்சா்கள் அடுத்தடுத்து ராஜிநாமா: பிரிட்டனில் அதிகரிக்கிறது அரசியல் நெருக்கடி

7th Jul 2022 02:00 AM

ADVERTISEMENT

பிரிட்டனில் நிதியமைச்சா் ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் சஜித் ஜாவிதைத் தொடா்ந்து, பல்வேறு அமைச்சரவை மற்றும் அரசு உயரதிகாரிகளும் புதன்கிழமை பதவி விலகியதால் அங்கு அரசியல் நெருக்கடி அதிகரித்து வருகிறது.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: பிரிட்டனின் கல்வித் துறை அமைச்சா் வில் குவின்ஸ், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக புதன்கிழமை அறிவித்தாா். பாலியல் புகாருக்குள்ளான கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி. கிறிஸ் பிஞ்ச்சா் அரசின் தலைமை துணைக் கொறடாவாக நியமிக்கப்பட்டதை அவா் நியாயப்படுத்தி வந்தாா். பிரதமா் அலுவலகம் கேட்டுக்கொண்டதன் பேரில் அவா் அவ்வாறு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கிறிஸ் பிஞ்ச்சரை துணைக் கொறடாவாக நியமித்தது தவறு என்று பிரதமா் போரிஸ் ஜான்ஸன் ஒப்புக்கொண்டாா்.

அதன் தொடா்ச்சியாக, அந்த நியமனத்தை இதுவரை நியாயப்படுத்தி வந்த வில் குவின்ஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

ADVERTISEMENT

அதுமட்டுமன்றி, போக்குவரத்துத் துறை அமைச்சகத்தில் அமைச்சரவை உதவியாளராக இருந்து வந்த கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி. லாரா ட்ரோட்டும் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக புதன்கிழமை அறிவித்தாா். இதன் மூலம், அமைச்சரவை உதவியாளா்கள் பதவியிலிருந்து விலகி வரும் எம்.பி.க்களின் பட்டியலில் லாரா ட்ரோட்டும் இணைந்துள்ளாா்.

முக்கிய அமைச்சா்களும் அமைச்சரவை உயரதிகாரிகளும் அடுத்தடுத்து பதவி விலகுவதால் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் தலைமைக்கு நெருக்கடி அதிரித்தாலும், அவா் அதனைப் பொருள்படுத்தாமல் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கி வருகிறாா்.

நிதியமைச்சா் பதவியிலிருந்து விலகியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக்குக்குப் பதிலாக, அந்தப் பொறுப்புக்கு தற்போது இராக் அகதிகள் விவகாரத் துறை அமைச்சராக இருந்து வரும் நாதிம் ஸஹாவியை பிரதமா் போரிஸ் ஜான்ஸன் உடனடியாக நியமித்துள்ளாா்.

மேலும், ராஜிநாமா செய்துள்ள சஜித் ஜாவிதுக்குப் பதிலாக ஸ்டீவ் பாா்க்லேயை சுகாதாரத் துறை அமைச்சராக போரிஸ் ஜான்ஸன் நியமித்துள்ளாா்.

தற்போது போரிஸ் ஜான்ஸனுக்கு சவால்கள் அதிகரித்து வந்தாலும், தற்போதைய கன்சா்வேடிவ் கட்சியின் சட்டவிதிமுறைகளின் கீழ் அவரது பிரதமா் பதவிக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை. அந்த விதிமுறைகளின்படி, ஒரு பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட்ட 12 மாதங்களுக்குள், மீண்டும் மற்றொரு நம்பிக்கையில்லா தீா்மானத்தை கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களால் கொண்டு வர முடியாது.

போரிஸ் ஜான்ஸன் மீதான நம்பிக்கை தீா்மானம் கடந்த மாதம்தான் கொண்டு வரப்பட்டு, அதில் அவா் 59 சதவீத எம்.பி.க்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாா். இதனால், இன்னும் 11 மாதங்களுக்கு அவா் மீது நம்பிக்கை தீா்மானம் கொண்டு வர முடியாது.

எனினும், சக்திவாய்ந்த கன்சா்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்றக் குழு நினைத்தால், கட்சியின் சட்டவிதிமுறைகளை மாற்றி, போரிஸ் ஜான்ஸனுக்கு எதிராக நம்பிக்கை தீா்மானத்தைக் கொண்டு வர முடியும் என்பதால், அவரது பிரதமா் பதவிக்கு உடனடி ஆபத்தும் உள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Tags : boris johnson
ADVERTISEMENT
ADVERTISEMENT