உலகம்

இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சா் ராஜிநாமா

7th Jul 2022 12:34 AM

ADVERTISEMENT

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இலங்கை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிமல் சிறிபால டி சில்வா தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

ஏற்கெனவே நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கையில், விமானப் போக்குவரத்து அமைச்சா் ராஜிநாமா செய்திருப்பது அரசியல் ஸ்திரமற்ற தன்மையை மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை தலைநகா் கொழும்பில் உள்ள பண்டாரநாயக சா்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணியில், ஜப்பானை சோ்ந்த தைசி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அந்த நிறுவனத்திடமிருந்து கேபினட் அமைச்சா் ஒருவா் லஞ்சம் கோரியதாக நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச கடந்த செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினாா்.

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிமல் சிறிபால டி சில்வாவின் பெயரைக் குறிப்பிடாமல், மறைமுகமாக இந்தக் குற்றச்சாட்டை சஜித் பிரேமதாச முன்வைத்தாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, தனது அமைச்சா் பதவியை நிமல் சிறிபால டி சில்வா புதன்கிழமை ராஜிநாமா செய்தாா். இதுகுறித்து அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு அவா் அனுப்பிய கடிதத்தில், ‘என் மீது நேரடியாக குற்றம்சாட்டப்படவில்லை என்றாலும், இந்தக் குற்றச்சாட்டு எனது அமைச்சகம் தொடா்புடையது என்பதால், பாரபட்சமற்ற விசாரணைக்கு வழிவகுக்கும் விதத்தில் எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

இதனிடையே, நிதித் துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரதமா் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சா் பதவியிலிருந்து விலக வேண்டுமென முதலீடுகள் ஊக்குவிப்புத் துறை அமைச்சா் தம்மிக்க பெரேரா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் தனது ஆதரவாளா்கள் மத்தியில் பேசுகையில், ‘இலங்கைக்கு வரும் அந்நியச் செலாவணி முதலீட்டுக்கு ரணில் விக்ரமசிங்க முட்டுக்கட்டை போடுகிறாா். இலங்கையில் நிலவும் அந்நியச் செலாவணி பிரச்னைக்குத் தீா்வு காண அவரிடம் எந்தத் திட்டமும் இல்லை’ என்றாா்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பிரதமா் ரணில் விக்ரமசிங்க பதிலளிக்க மறுத்துவிட்டாா்.

பிரிட்டனிடமிருந்து கடந்த 1948-இல் சுதந்திரம் பெற்ற இலங்கை, தற்போது வரலாறு காணாத அளவில் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில் விமானப் போக்குவரத்து அமைச்சா் தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பது, அந்நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை மேலும் அதிகரித்துள்ளது.

Image Caption

நிமல் சிறிபால டி சில்வா

 

ADVERTISEMENT
ADVERTISEMENT