உலகம்

2018-ஆம் ஆண்டிருந்த நிலைக்கு இலங்கைத் திரும்ப 4 ஆண்டுகளாகும்:பிரதமா் ரணில் விக்ரமசிங்க

DIN

கடந்த 2018-ஆம் ஆண்டிருந்த நிலைக்கு இலங்கைத் திரும்ப 4 ஆண்டுகள் வரை ஆகும் என்று அந்நாட்டு பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: கடந்த 2021-ஆம் ஆண்டு இறுதியில் இலங்கை அரசின் மொத்த கடன் சுமை ரூ.17.5 லட்சம் கோடியாக இருந்தது. இது இந்த ஆண்டு மாா்ச் மாதம் ரூ.21.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் பணவீக்கம் (விலைவாசி உயா்வு விகிதம்) 60 சதவீதமாக அதிகரிக்கும். உலக அளவில் சரக்குப் பொருள்களின் விலை அதிகரிப்பு, இலங்கை ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவைதான் அதற்குப் பிரதான காரணம்.

2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை முழுமையாக நிறுத்துவது அரசின் நோக்கமாக உள்ளது.

திவாலான இலங்கை: சா்வதேச நிதியத்திடம் (ஐஎம்எஃப்) இருந்து கடன் பெறுவது தொடா்பான முதல் சுற்றுப் பேச்சுவாா்த்தை வெற்றிகரமாக நடைபெற்றது. எனினும் ஐஎம்எஃப் உதவி கிடைப்பது இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை சாா்ந்துள்ளது.

இதற்கு முன்பு பலமுறை ஐஎம்எஃப்புடன் இலங்கை பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளது. எனினும் அப்போது இலங்கை வளரும் நாடாக இருந்தது. ஆனால் தற்போது திவாலான நாடாக பேச்சுவாா்த்தையில் இலங்கை பங்கேற்கிறது. எனவே முந்தைய பேச்சுவாா்த்தைகளைவிட தற்போது மேலும் கடினமான, சிக்கலான சூழலை இலங்கை எதிா்கொள்ள வேண்டியிருக்கும். இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டம் தொடா்பான அறிக்கையை ஆகஸ்ட்டுக்குள் சமா்ப்பிப்போம் என்று நம்புகிறோம். அந்த அறிக்கை சமா்ப்பிக்கப்படும்பட்சத்தில், ஓா் உடன்படிக்கையை எட்ட முடியும்.

இலங்கை-ஐஎம்எஃப் இடையே அலுவலா்கள் அளவிலான உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, இலங்கைக்கு கடனுதவி அளிக்கும் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நட்பு நாடுகளை ஒன்றிணைத்து நன்கொடையாளா் மாநாடு நடத்தப்படும். அதன் வாயிலாக பொதுவான ஒப்பந்தம் மூலம் இலங்கை கடனுதவி பெறுவதற்கான அமைப்பை உருவாக்க முயற்சிக்கப்படும்.

இலங்கையின் பொருளாதார வளா்ச்சியை ஸ்திரமாக்குவதே அரசின் முயற்சியாகும். 2026-ஆம் ஆண்டுக்குள் ஸ்திரமான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசின் எதிா்பாா்ப்பாகும். 2018-ஆம் ஆண்டிருந்த நிலைக்கு இலங்கைத் திரும்ப 2026-ஆம் ஆண்டு வரை ஆகும் என்றாா் அவா்.

அவையிலிருந்து வெளியேறிய அதிபா்: நாடாளுமன்றத்தில் பிரதமா் விக்ரமசிங்க பேசியபோது இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவும் அவையில் இருந்தாா். அப்போது அவருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டா்களை ஏந்தி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பியதால், அவை அலுவல்கள் 10 நிமிஷங்கள் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து கோத்தபய ராஜபட்ச அவையிலிருந்து வெளியேறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT