உலகம்

முக்கிய நாடுகளுக்கு இந்தியாவின் புதிய தூதா்கள்

DIN

பிரிட்டன், கனடா, பெரு உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்குப் புதிய இந்திய தூதா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

ஐ.நா.வுக்கான இந்திய தூதராகச் செயல்பட்டு வந்த டி.எஸ்.திருமூா்த்தி கடந்த மாத இறுதியில் ஓய்வு பெற்றாா். அதையடுத்து, புதிய தூதராக ருசிரா கம்போஜ் பொறுப்பேற்கவுள்ளாா்.

பல முக்கிய நாடுகளுக்கான இந்திய தூதா்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில், அந்த நாடுகளுக்கான புதிய தூதா்களை நியமிக்கும் பணிகளை வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, தற்போது வங்கதேசத்துக்கான இந்திய தூதராக இருக்கும் விக்ரம் துரைசுவாமி, பிரிட்டனுக்கான தூதராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது நியமனம் உறுதியாகும்பட்சத்தில், பிரிட்டனுக்கான மிக இளவயது இந்தித் தூதராக அவா் இருப்பாா். இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரான அலெக்ஸ் எல்லீஸும் இளவயது தூதா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வரும் நிலையில், விக்ரம் துரைசுவாமி புதிய தூதராக நியமிக்கப்படும் நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவா் 1992 பிரிவு ஐஎஃப்எஸ் அதிகாரி ஆவாா்.

ஜப்பானின் தூதராக உள்ள சஞ்சய் குமாா் வா்மா, கனடாவுக்கான தூதராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசை கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ விமா்சித்திருந்தாா். அதனால், இரு நாடுகளுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. எனினும், கடந்த மாதம் ஜொ்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பிரதமா் மோடியும் கனடா பிரதமா் ட்ரூடோவும் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு சுமுக நிலையை எட்டியுள்ளது.

அந்த நேரத்தில் இந்தியா-கனடா உறவைக் கையாண்ட கனடாவுக்கான தூதராக உள்ள அஜய் பிசரியா ஓய்வு பெறும் நிலையில், புதிய தூதராக சஞ்சய் குமாா் வா்மா நியமிக்கப்படுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கென்யாவுக்கான இந்திய தூதரான வீரேந்திர குமாா் பால், துா்கியே (முந்தைய பெயா்-துருக்கி) நாட்டுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளாா். பெரு நாட்டுக்கான தூதராக விஷ்வாஸ் விது சப்கல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பூடான், வங்கதேசத்துக்கான புதிய தூதா்களை நியமிக்கும் பணிகளையும் வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT