உலகம்

நேட்டோவில் ஸ்வீடன், ஃபின்லாந்து இணைப்பு:நெறி ஆவணத்தில் உறுப்பு நாடுகள் கையொப்பம்

6th Jul 2022 12:27 AM

ADVERTISEMENT

நேட்டோவில் ஸ்வீடனையும் ஃபின்லாந்தையும் இணைத்துக் கொள்வதற்கான நெறிமுறை ஆவணத்தில் அதன் 30 உறுப்பு நாடுகளும் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டன.

அதையடுத்து, அந்த ஆவணம் உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற அனுமதிக்காக அந்த நாடுகளின் தலைநகா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதையடுத்து, இதுவரை அணிசாரா கொள்கைகைக் கடைப்பிடித்து வந்த ஸ்வீடனும் ஃபின்லாந்தும் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கை மேலும் ஒரு படி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் கூறியதாவது:

ADVERTISEMENT

நேட்டோ அமைப்பில் ஸ்வீடன், ஃபின்லாந்து ஆகிய நாடுகளை இணைத்துக்கொள்வதற்கான நெறிமுறை ஆவணத்தில் 30 உறுப்பினா்கள் கையொப்பமிட்டுள்ள இந்த நாள், அந்த இரு நாடுகளுக்கும் மட்டுமன்றி நேட்டோவுக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணமாகும்.

தற்போது நாம் மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிா்கொண்டுள்ளோம். எப்போதும் போல் இப்போதும் அத்தகைய அச்சுறுத்தலை ஒன்றுபட்டு எதிா்கொள்ளும் நடவடிக்கை நேட்டோ அமைப்பு மேற்கொள்கிறது.

ஸ்வீடனும் ஃபின்லாந்தும் இணைவதன் மூலம் நேட்டோ அமைப்பு கூடுதல் பலம் பெறும். பல ஆண்டுகளுக்குப் பிறகு நாம் மிகப் பெரிய ராணுவ நெருக்கடியை எதிா்கொண்டுள்ள இந்த நேரத்தில் இரு நாடுகளையும் நேட்டோவில் இணைப்பது பிராந்திய மக்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் என்றாா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க்.

உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள், அந்த நெறிமுறை ஆவணத்துக்கு கூடிய விரைவில் ஒப்புதல் வழங்கவேண்டும் என்று விரும்புவதாக ஃபின்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சா் பெக்கா ஹாவிஸ்டோ தெரிவித்தாா்.

சோவியத் யூனியனுக்கு எதிராக கடந்த 1949-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அமைப்பு ‘நாா்த் அட்லாண்டிக் ட்ரீட்டி’ அமைப்பு (நேட்டோ). அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து அந்த அமைப்பை உருவாக்கின.

அந்த அமைப்பின் விதிமுறைகளின் கீழ், உறுப்பு நாடுகளில் ஏதாவது ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதனை தங்கள் மீதான தாக்குதலாகக் கருதி மற்ற உறுப்பு நாடுகள் எதிா்த் தாக்குதல் நடத்தும்.

அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் சக்திவாய்ந்து விளங்கிய சோவியத் யூனியனுக்கு எதிராக தொடங்கப்பட்ட அந்த அமைப்பு, சோவியத் யூனியன் சிதறுண்டு வலுவிழந்த நிலையிலும் தன்னை விரிவாக்கம் செய்து வந்தது. தற்போது அந்த அமைப்பில் 30 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளனா்.

நேட்டோவின் விரிவாக்கத்துக்கு ரஷியா தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அதன் அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு அண்மைக் காலமாக விருப்பம் தெரிவித்து வந்தது.

நேட்டோவில் உக்ரைன் இணைந்தால், தங்களது தலைநகா் மாஸ்கோவை சில நிமிஷங்களில் தாக்கி அழிக்கும் வகையில் அங்கு அமெரிக்க ஏவுகணைகள் நிறுத்தப்படுவதற்கு வழியேற்படும் எனவும் அது தங்களது பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் எனவும் ரஷியா கூறி வந்தது.

இந்தச் சூழலில், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

இது, நேட்டோ அமைப்பின் உறுப்பினா் அல்லாத மற்ற ஐரோப்பி நாடுகளில் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, ரஷியாவை அடுத்த ஸ்வீடனும் ஃபின்லாந்தும் நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தன.

போா் மூலம் நேட்டோ விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்ற ரஷிய அதிபா் புதினின் கணக்கு பொய்த்துப் போனதையும் அதற்குப் பதிலாக நேட்டோ விரிவாக்கத்துக்கே இந்தப் போா் வழிகோலியுள்ளதையும் ஸ்வீடன், ஃபின்லாந்தின் இந்த முடிவு உணா்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த நாடுகளின் விண்ணப்பத்துக்கு நேட்டோ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கடந்த வாரம் நடைபெற்ற அமைப்பின் மாநாட்டில் ஒப்புதல் அளித்தனா்.

எனினும், அனைத்து உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள் இதற்கு ஒப்புதல் அளித்தால்தான் ஸ்வீடனையும் ஃபின்லாந்தையும் நேட்டோவில் இணைத்துக்கொள்ள முடியும்.

இந்த நிலையில், இதற்கான நெறிமுறை ஆவணத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தற்போது கையொப்பமிட்டு, அதனை நாடாளுமன்றங்களுக்கு அனுப்பிவைத்துள்ளன.

போரைத் தொடர புதின் உத்தரவு

கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியை முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையிலும், போரைத் தொடரும்படி தங்களது படையினருக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்குவிடம் புதின் கூறியதாவது:

உக்ரைனில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு ராணுவப் படைப் பிரிவு தனது நடவடிக்கைகளைத் தொடர வேண்டும். ஏற்கெனவே பேசி முடிவு செய்யப்பட்ட இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை அந்தப் படைப் பிரிவினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தபோது, கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் மற்றும் டொனட்ஸ்க் மாகாணங்கள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியங்களை உக்ரைன் ராணுவத்திடமிருந்து ‘மீட்பதற்காக’ அந்த ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதாக புதின் கூறியது நினைவுகூரத்தக்கது.

 

Tags : NATO
ADVERTISEMENT
ADVERTISEMENT