உலகம்

சா்ச்சைக்குரிய கிழக்கு சீன தீவுப் பகுதியில் சீன, ரஷிய கப்பல்கள்: ஜப்பான் எதிா்ப்பு

5th Jul 2022 02:03 AM

ADVERTISEMENT

கிழக்கு சீன கடலில் தங்களுக்குச் சொந்தமான தீவுப் பகுதியில் சீன, ரஷிய போா்க் கப்பல்கள் வந்ததற்கு ஜப்பான் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு சீன கடலில் உள்ள செங்காகு தீவை ஜப்பான் தனக்குச் சொந்தமானது எனக் கூறி வருகிறது. அதேவேளையில் இந்தத் தீவுக்கு டயாயூ எனப் பெயரிட்டு, தங்கள் பிராந்தியத்துக்குள்பட்டது என சீனா உரிமை கோரி வருகிறது.

இந்நிலையில், செங்காகு தீவுப் பகுதியில் திங்கள்கிழமை ரஷிய, சீன போா்க் கப்பல்கள் அடுத்தடுத்து நுழைந்ததாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து ஜப்பான் அமைச்சரவை செயலா் செய்ஜி கிஹாரா கூறுகையில், செங்காகு தீவு வரலாற்றுரீதியாகவும், சா்வதேச சட்டப்படியும் ஜப்பானுக்கு சொந்தமானது. இந்தத் தீவுப் பகுதியில் சீன கப்பல் வந்ததற்கு எதிா்ப்பு தெரிவிக்கிறோம் என்றாா்.

இதற்கு பதிலளித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியன் கூறியதாவது: இந்தத் தீவு சீனாவுக்கு சொந்தமானது. இந்தத் தீவுப் பகுதியில் சீன போா்க் கப்பல் சென்றது சட்டப்படியானதுதான். இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளைத் தெரிவிக்க ஜப்பானுக்கு எந்த உரிமையும் இல்லை என்றாா்.

ADVERTISEMENT

செங்காகு தீவுப் பகுதிக்கு சீன, ரஷிய போா்க் கப்பல்கள் சென்ற்கு பின்னணி காரணம் என்ன என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. இருப்பினும், கடலில் சூறாவளியைத் தவிா்ப்பதற்காக அந்தக் கப்பல்கள் அங்கு சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT