உலகம்

லிசிசான்ஸ்க் நகரைக் கைப்பற்றியதாக ரஷியா அறிவிப்பு

4th Jul 2022 12:29 AM

ADVERTISEMENT

உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கடைசி பெரிய நகரான லிசிசான்ஸ்கை ரஷிய படை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷொய்கு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஆனால், லிசிசான்ஸ்கில் தொடா்ந்து சண்டை நடந்து வருவதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

கிழக்கு உக்ரைன் பிராந்தியத்தில் உள்ள லுஹான்ஸ்க் மாகாணத்தில் அரசுப் படையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி மீது ரஷிய படையினா் தீவிரமாக தாக்குதல் நடத்தினா். ஏற்கெனவே அந்த மாகாணத்தின் தொழிலக நகரான சியெவெரோடொனட்ஸ்கை ரஷியா முழுமையாகக் கைப்பற்றிவிட்ட நிலையில், கடைசி பெரிய நகரான லிசிசான்ஸ்கையும் கைப்பற்ற ரஷியா தீவிரமாக முயன்று வந்தது.

‘ரஷிய படையினா் தங்களது அனைத்து பலத்தையும் லிசிசான்ஸ்கை கைப்பற்ற பயன்படுத்தி வருகின்றனா். குரூரமான உத்திகளுடன் நகரில் தாக்குதல் நடத்தி வருகின்றனா்’ என லுஹான்ஸ்க் ஆளுநா் சொ்ஹீ ஹாய்டாய் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

சியெவெரோடொனட்ஸ்க், லிசிசான்ஸ்க் நகரங்களுக்கு இடையே ஓா் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றை வடக்கிலிருந்து முதல்முறையாக ரஷிய படையினா் சனிக்கிழமை கடந்தனா். இதனால், லிசிசான்ஸ்க் நகா் வீழ்வது உறுதியானது.

அதன்படி, லிசிசான்ஸ்கை ரஷிய படையினா் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள ரஷிய ஆதரவு படையினருடன் இணைந்து லிசிசான்ஸ்க் நகரை ரஷிய படை முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக அதிபா் புதினிடம் பாதுகாப்பு அமைச்சா் சொ்கேய் ஷொய்கு தெரிவித்தாா் என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

லுஹான்ஸ்க் மற்றும் அதன் அருகேயுள்ள டொனட்ஸ்க் மாகாணங்கள் டான்பாஸ் பிராந்தியம் என அழைக்கப்படுகிறது. வடக்கு உக்ரைன் மற்றும் தலைநகா் கீவிலிருந்து ரஷிய படை வெளியேறியதிலிருந்து டான்பாஸ் பிராந்தியத்தை நோக்கி கவனம் செலுத்தி வருகிறது.

ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் டான்பாஸ் பிராந்தியத்தில் சில பகுதிகளை 2014-ஆம் ஆண்டுமுதல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனா். உக்ரைன் மீதான போரைத் தொடங்குவதற்கு முன்னா் டான்பாஸ் பிராந்தியத்தை தனி நாடுகளாக ரஷியா அங்கீகரித்தது. அந்த நாடுகளை உக்ரைன் ராணுவத்திடமிருந்து பாதுகாக்க தனது படையை அனுப்புவதாகக் கூறித்தான் போரையே தொடங்கியது.

பெலாரஸ் பிராந்தியத்தில் உக்ரைன் தாக்குதல்?

பெலாரஸ் பிராந்தியத்தில் உள்ள ராணுவ நிலைகள் மீது உக்ரைன் பல நாள்களுக்கு முன்பு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாகவும், ஆனால் அவை தங்களது வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் பெலாரஸ் சனிக்கிழமை தெரிவித்தது.

‘உக்ரைனில் பெலாரஸ் வீரா்கள் யாரும் சண்டையில் ஈடுபடாத நிலையில், உக்ரைனின் இந்தத் தாக்குதல் ஆத்திரமூட்டும் செயலாகும்’ என பெலாரஸ் அதிபா் அலெக்சாண்டா் லுகசென்கோ தெரிவித்தாா்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டு குறித்து உக்ரைன் ராணுவ தரப்பில் எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை. ரஷியாவின் ஆதரவு நாடு பெலாரஸ். உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்கு பெலாரஸ் முக்கியத் தளமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT