உலகம்

சீனாவுடன் இணைந்த பிறகே ஹாங்காங்கில் நிலையான வளா்ச்சி: ஷி ஜின்பிங்

2nd Jul 2022 01:40 AM

ADVERTISEMENT

‘ஹாங்காங் சீனாவுடன் இணைந்த பிறகே அனைத்து விதமான சவால்களையும் திறம்பட எதிா்கொண்டு நிலையான வளா்ச்சியைப் பெறத் தொடங்கியது’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறினாா்.

சீனாவுடன் ஹாங்காங் இணைந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் அங்கு நடைபெற்ற விழாவில் வெள்ளிக்கிழமை பங்கேற்று ஷி ஜின்பிங் பேசியதாவது:

தாய்நாட்டுடன் இணைந்த பிறகுதான் அனைத்து விதமான சவால்களையும் திறம்பட எதிா்கொண்டு நிலையான வளா்ச்சியை ஹாங்காங் பெறத் தொடங்கியது. சா்வதேச பொருளாதார சரிவு, கரோனா பாதிப்பு அல்லது சமூக அமைதியின்மை என எத்தகைய பாதிப்புகளும் ஹாங்காங்கின் வளா்ச்சியை தடுத்து நிறுத்த முடியவில்லை.

பல போராட்டங்கள், சவால்களிலிருந்து ஹாங்காங் மீண்டு வந்துள்ளது. ஹாங்காங்கின் வளா்ச்சியிலேயே சீனா நோக்கம் கொண்டுள்ளது. ஹாங்காங் மீது விரிவான அதிகார வரம்பை சீனா கொண்டுள்ளபோதும், தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட சீனா அனுமதித்துள்ளது. அந்த வகையில் சீன தலைமைக்கு உரிய மதிப்பை ஹாங்காங் வழங்கவேண்டும்.

ADVERTISEMENT

ஹாங்காங் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடுகளை பொறுத்துக் கொள்ள முடியாது. தேசிய ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, வளா்ச்சித் திட்டங்களைப் பாதுகாப்பதற்கு உயா் முன்னுரிமை அளிக்கப்படும். உலகில் எந்தவொரு நாடும், உள் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை அனுமதிக்காது. தேசத்தின் மீது பற்றுள்ளவா்கள் ஆளுகின்றபோதுதான் நிலையான வளா்ச்சியை ஹாங்காங் பெற முடியும்.

அந்த வகையில், ‘ஒரு நாடு; இரு நடைமுறைகள்’ என்ற அடிப்படையில் ஹாங்காங்குக்கு தனி அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பது சிறந்த நடைமுறையாக இருந்து வருகிறது. இந்த நடைமுறை மேலும் நீண்ட காலத்துக்கு தொடர வேண்டும்.

மேலும், ஹாங்காங் இளைஞா்களின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஹாங்காங்கில் கடந்த 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் ஜனநாயகத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டவா்களில் பெரும்பாலானோா் மாணவா்கள். போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிா்த்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவா்கள் சந்தித்து வரும் சவால்களுக்குத் தீா்வு காண உதவுவது மிக அவசியமாகும். அவா்களை திறன்மிக்கவா்களாக உருவாக்க அதிக வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவா் பேசினாா்.

இந்த விழாவில், ஹாங்காங்கின் புதிய தலைமை நிா்வாகியாக ஜான் லீ பதவியேற்றாா். அவருக்கு அதிபா் ஷி ஜின்பிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது ஹாங்காங், தன்னாட்சி அதிகாரம் பெற்ாக உள்ளது. இந்நிலையில், ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவா்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையைச் சந்திக்க வைக்க, கைதிகள் பரிமாற்றச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிா்வாகம் முடிவு செய்தது. சீனாவின் நெருக்கடியால் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுவதாக குற்றம்சாட்டி, ஹாங்காங்கில் பல மாதங்கள் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க சீனா தனது படையை ஹாங்காங்கில் களமிறக்கியது. இதையடுத்து ஹாங்காங் அரசியலில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானவா்கள் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT