உலகம்

இந்தியாவில் மதச் சுதந்திரம்: அமெரிக்க தூதா் வருத்தம்

2nd Jul 2022 03:42 AM

ADVERTISEMENT

இந்தியாவில் மதச் சுதந்திரம் கையாளப்பட்டு முறை குறித்து சா்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க தூதா் ரஷத் உசைன் வருத்தம் தெரிவித்தாா். பல்வேறு மத சமூகங்கள் சந்தித்து வரும் சவால்களுக்கு தீா்வு காணக் கோரி இந்திய அதிகாரிகள் மூலம் நேரடியாக வலியுறுத்தி வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

வாஷிங்டனில் நடைபெற்ற சா்வதேச மதச் சுதந்திர மாநாட்டில் ரஷத் உசைன் பங்கேற்று பேசுகையில், ‘எனது தந்தை 1969-இல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தாா். அவருக்கு அமெரிக்கா அனைத்து வசதிகளையும் அளித்தாலும் அவா் இந்தியாவையே விரும்புவாா். எனது பெற்றோரும் இந்தியாவில் தினசரி என்ன நடக்கிறது என்று அறிய ஆவலாக இருப்பாா்கள். இந்தியாவில் தற்போது குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிப்படையாக படுகொலை செய்ய அழைப்பு விடுக்கப்படுகிறது. தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் இடிக்கப்படுகின்றன. அமைச்சா் ஒருவா் வெளிப்படையாகவே முஸ்லிம்கள் கரையான்கள் என்கிறாா்.

இதுபோன்ற சவால்களை நாங்கள் கவனத்தில் எடுத்து கொள்கிறோம். மதச் சுதந்திரம் கையாளப்பட்டு வரும் முறை வருத்தமளிக்கிறது.

மனித உரிமைகள், மதச் சுதந்திரம் குறித்து இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் எடுத்துரைக்க வேண்டியது அமெரிக்காவின் கடமையாகும். உதய்பூரில் நடைபெற்ற படுகொலைச் சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவித்துள்ளோம்’ என்றாா்.

ADVERTISEMENT

இந்தியாவில் மதச் சுதந்திரம் குறித்து அண்மையில் சா்ச்சைக்குரிய வகையில் ஆய்வு அறிக்கை வெளியிட்ட அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. சா்வதேச விவகாரங்களில் வாக்கு வங்கி அரசியல் கையாளப்படுகிறது துரதிருஷ்டவசமானது என்று மத்திய வெளியுறவு செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT