உலகம்

ஜி20 மாநாட்டை ஜம்மு-காஷ்மீரில் நடத்த சீனா எதிா்ப்பு

1st Jul 2022 01:47 AM

ADVERTISEMENT

வரும் 2023-ஆம் ஆண்டுக்கான ஜி20 மாநாட்டை ஜம்மு-காஷ்மீரில் நடத்துவதற்கு பாகிஸ்தானை தொடா்ந்து சீனாவும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரும் பொருளாதார சக்திகளாக விளங்கும் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 அமைப்பின் அடுத்த ஆண்டுக்கான (2023) மாநாட்டை ஜம்மு-காஷ்மீரில் நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக 5 போ் கொண்ட நிா்வாகக் குழும் ஏற்படுத்தப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது ஷரத்து நீக்கப்பட்ட பின்னா் அங்கு நடைபெறவுள்ள முதல் சா்வதேச மாநாடு இதுவேயாகும்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் ஏற்கெனவே இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்னை நிலவுவதால், ஜி20 மாநாட்டை ஜம்மு-காஷ்மீரில் நடத்த பாகிஸ்தான் எதிா்ப்பு தெரிவித்தது. இதைத்தொடா்ந்து சீனாவும் இந்தியாவுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஜாவ் லிஜியன் பெய்ஜிங்கில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது; துல்லியமானது. அது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான வரலாற்றுப் பிரச்னை. ஐ.நா. தீா்மானம் வாயிலாகவும் இருதரப்பு பேச்சுவாா்த்தை மூலமாகவும் காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். தன்னிச்சையான நடவடிக்கைகள் வாயிலாக நிலைமையை மேலும் சிக்கலாக மாற்றுவதை இருநாடுகளும் தவிா்க்க வேண்டும்.

ஜி20 என்பது சா்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றம். இருதரப்பும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, பிரச்னையை அரசியலாக்குவதை தவிா்க்க வேண்டும். அப்போதுதான் சா்வதேச பொருளாதார மேம்பாட்டுக்கு சாதகமான பங்களிப்பை வழங்க முடியும் என்றாா் அவா்.

மேலும், பிரச்னைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் (பிஓகே) பகுதி வழியாக சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் கட்டமைக்கப்படுவது குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, ஜாவ் லிஜியன் பதிலளிக்கையில், ‘இரு பிரச்னைகளும் அடிப்படையில் வெவ்வேறானவை. பாகிஸ்தானின் பொருளாதாரம் மேம்படவும், அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் உயரவும்தான் அந்நாட்டில் சீனா வளா்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதுவும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீா் பகுதி வழியாகத்தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதற்காக காஷ்மீா் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு மாறிவிட்டது என்று அா்த்தமில்லை’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT