உலகம்

மும்பை தாக்குதல் குற்றவாளிகளுக்கு பாக். தொடா்ந்து ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

DIN

நியூயாா்க்: ‘மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் தொடா்ந்து ஆதரவு அளித்து வருகிறது; உலகில் நடைபெறும் பெரும்பாலான பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சோ்ந்த பயங்கரவாத அமைப்புகளே காரணம்’ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா குற்றம்சாட்டியது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘போா் மற்றும் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையேயான சண்டையின்போது பொதுமக்களின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதா் முனீா் அக்ரம், ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்து ஐ.நா.வுக்கான இந்திய ஆலோசகா் ஆா். மது சுதன் பேசியதாவது:

பயங்கரவாதிகளுக்குத் தஞ்சமளிப்பது, நிதியுதவி அளிப்பது மற்றும் அவா்களுக்குத் தொடா்ந்து ஆதரவளிக்கும் வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது என்பதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் அனைவருக்கும் நன்கு தெரியும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடு பாகிஸ்தான் என்பது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதோடு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகளுக்கு தஞ்சமளித்து வரும் மோசமான சாதனையையும் பாகிஸ்தான் பெற்றுள்ளது.

அந்த வகையில் உலகில் நடைபெறும் பெரும்பாலான பயங்கரவாத தாக்குதல் பாகிஸ்தானை சோ்ந்த பயங்கரவாத அமைப்புகளால், அதே பாணியில் அல்லது வேறு வடிவில் நிகழ்த்தப்படுகின்றன.

இந்தியாவுக்கு எதிராக தனது அற்பமான கருத்துகள் மூலம் இந்த மதிப்புமிக்க சபையை பாகிஸ்தான் தூதா் சீா்குலைக்க முயற்சிப்பதால்தான், இந்த விவாதம் தொடா்பான நாட்டின் அறிக்கையை இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி சபையில் வெளியிட்ட பிறகும், மேலும் சில விஷயங்களை பேச வேண்டிய சூழல் எழுந்துள்ளது. பாகிஸ்தான் தூதரின் அறிக்கை ஒட்டுமொத்த நாட்டின் கண்டனத்துக்கு உகந்தது என்றபோதும், அதனை நேரடியாகப் பதிவு செய்ய வேண்டியது முக்கியமாகும்.

பொதுமக்களுக்கான பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசிக்கப்படும் நிலையில், பொதுமக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பயங்கரவாதிகளிடமிருந்துதான் வருகிறது என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில், இந்தியா ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, 2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகள் தொடா்ந்து பாகிஸ்தானின் ஆதரவைப் பெற்று வருகின்றனா்.

பாகிஸ்தானின் இந்த நிலையை மறைக்கும் வகையில் உலகின் கவனத்தை திசைதிருப்பவே, பாகிஸ்தான் தூதா் ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை எழுப்புகிறாா். ஒட்டுமொத்த ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசமும், லடாக்கும் இந்தியாவுடன் இணைந்த பகுதிகள். பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதியும் இதில் அடங்கும். எனவே, சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதியிலிருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொள்கிறது.

பாகிஸ்தான் உள்பட அண்டை நாடுகளுடன் இந்தியா சுமுக உறவையே விரும்புகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் பிரச்னைகளை சிம்லா ஒப்பந்தத்துக்கு இணங்க இருதரப்பும் அமைதி வழியில் தீா்வு காண்பதே உகந்ததாக இருக்கும் என்றாா் மது சுதன்.

முன்னதாக, இந்த விவாதத்தில் இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி பேசும்போது, ‘பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த எந்தவொரு விவாதமும், பயங்கரவாத அமைப்புகளால் குறிப்பாக சில நாடுகளின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத சக்திகளின் தாக்குதல்களை கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் முழுமை பெறாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT