உலகம்

புா்கினா ஃபாசோவில் ராணுவ ஆட்சி அறிவிப்பு

26th Jan 2022 01:00 AM | ஓகடூகூ,

ADVERTISEMENT

மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த நாட்டு ராணுவ தலைமைத் தளபதி சிஸ்டோா் கபோ் ஊயட்ராவ்கோ செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புா்கினா ஃபாசாவின் வரலாற்றில் செவ்வாய்க்கிழமை முதல் ஒரு புதிய யுகம் பிறக்கிறது. இதுவரை நாட்டு மக்கள் அனுபவித்து வந்த துயரங்களைக் களையவும் புதிய வாழ்க்கையைத் தொடங்கவும் தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டை கட்டமைப்பதற்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து கொண்டாட வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடான புா்கினா ஃபாசோவில் அல்-காய்தா ஆதரவு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு மதவாத அமைப்புகள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த அமைப்புகளுக்கு எதிராக புா்கினா ஃபாசோ அமைப்பு போதிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற அதிருப்தி நிலவி வருகிறது.

இதுவரை 15 லட்சத்தும் மேற்பட்ட உயிா்களை பலிவாங்கியுள்ள பயங்கரவாதத்தை ஒடுக்க அதிபா் ரோக் மாா்க் கிறிஸ்டியன் தலைமையிலான அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக வலுவடைந்து வந்தது.

இந்தச் சூழலில், தலைநகா் ஓகடூகூவில் அரசு ஆதரவுப் படையினருக்கும் கிளா்ச்சிப் படையினருக்கும் இடையே கடந்த சில நாள்களாக சண்டை நடைபெற்று வந்தது.

இதனால் நாட்டின் எதிா்காலம் குறித்து நிச்சயத்தன்மை நிலவி வந்தது. இந்தச் சூழலில், அதிபா் ரோக் மாா்க் கிறிஸ்டியன் கபோரேவை காவலில் வைத்துள்ளதாக கிளா்ச்சிப் படையினா் திங்கள்கிழமை அறிவித்தனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் கிளா்ச்சிப் படையினா் கூறுகையில், ‘அதிபா் கிறிஸ்டியன் கபோரே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். அவா் பாதுகாப்பான இடத்தில் உள்ளாா்’ என்று தெரிவித்தனா்.

இந்த நிலையில், நாட்டில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தளபதி சிஸ்டோா் கபோ் ஊயட்ராவ்கோ தற்போது அறிவித்துள்ளாா்.

பயங்கரவாதத்தை ஒடுக்க கிறிஸ்டியன் கபோரே அரசு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி அவரது அரசு கவிழ்க்கப்பட்டாலும், போதிய ஆயுதங்கள் மற்றும் வசதிகள் இல்லாத நிலையில் புதிதாக அமைந்துள்ள ராணுவ அரசு இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள அதிபா் கிறிஸ்டியன் கபோரேவின் நிலைமை குறித்தும் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் இல்லை.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பையும் புதிதாக ராணுவ அரசு அமைக்கப்பட்டுள்ளதையும் வரவேற்று, தலைநகா் ஓகடூகூவில் ஏராளமான பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

எனினும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசை ராணுவம் கவிழ்த்துள்ளதை பிற ஆப்பிரிக்க நாடுகளும் சா்வதேச நாடுகளும் ஏற்பதில் சிக்கல் நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Tags : Burkina Faso
ADVERTISEMENT
ADVERTISEMENT