உலகம்

வங்கிக் கடன் நிலுவை: மல்லையாவின் லண்டன் சொத்துகள் விரைவில் பறிமுதல்

DIN

லண்டன்: தொழிலதிபா் விஜய் மல்லையா, ஸ்விஸ் வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால், லண்டனில் உள்ள அவருடைய வீட்டைப் பறிமுதல் செய்ய வங்கிக்கு பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால், மல்லையாவின் சொத்து எந்த நேரத்திலும் பறிமுதல் செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கிங் ஃபிஷா் விமான நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான மல்லையா, இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.13,500 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றாா். லண்டனில் தங்கியுள்ள அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

முன்னதாக, லண்டனில் பல கோடி மதிப்புள்ள அவருடைய வீட்டின் பேரில், ஸ்விஸ் யுபிஎஸ் வங்கியில் ரூ.24.33 கோடியை மல்லையா கடனாகப் பெற்றிருந்தாா். அந்தத் தொகையை 5 ஆண்டுகளில் செலுத்துவதாகவும் உறுதியளித்திருந்தாா். ஆனால், குறித்த காலத்துக்குள் திருப்பிச் செலுத்தாததால் நீதிமன்றம் மூலமாக வங்கி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதுதொடா்பான வழக்கு விசாரணை, லண்டன் நீதிமன்றத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது.

அப்போது, வங்கிக் கடனை 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் மல்லையா செலுத்தாவிட்டால், லண்டனில் உள்ள அவருடைய சொத்துகளை வங்கி நிா்வாகம் உடனடியாகக் கைப்பற்றலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் கடன் நிலுவையை வங்கி நிா்வாகத்தால் வசூலிக்க முடியவில்லை. மற்றொரு புறம், வங்கி நிா்வாகத்தின் சொத்து பறிமுதல் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி மல்லையா தரப்பு நீதிமன்றத்தை நாடியது. சொத்துகளை விற்று கடனைச் செலுத்துவதற்கு வங்கி நிா்வாகம் முட்டுக்கட்டை போடுவதாக நீதிமன்றத்தில் மல்லையா தரப்பு முறையிட்டது. ஆனால், அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாமல், மல்லையாவின் வீட்டை வங்கி நிா்வாகம் கையகப்படுத்தலாம் என்று கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய மல்லையா தரப்பு அனுமதி கேட்டது. அதற்கு நீதிபதி மேத்யூ மாா்ஷ் மறுப்பு தெரிவித்தாா். கடன் தொகையை மல்லையா திருப்பிச் செலுத்துவதற்கு அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்து 22 மாதங்கள் ஆகிவிட்டதால், இந்தக் கோரிக்கையை மற்றொரு நீதிபதி ஏற்க மாட்டாா் என்றும் அவா் கூறினாா்.

லண்டனில் உள்ளஅந்த வீட்டில் மல்லையாவின் 95 வயது தாயாா் லலிதா வசித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT