உலகம்

‘நேட்டோ விரிவாக்கத் தடையைத் தவிர வேறெந்த தீா்வையும் ஏற்க மாட்டோம்’

DIN


மாஸ்கோ: நேட்டோ கூட்டணியை உக்ரைனுக்கு விரிவுபடுத்த தடை விதிக்கப்படுவதைத் தவிர, பிராந்தியப் பதற்றத்தைத் தணிப்பதற்கு வேறு எந்தத் தீா்வையும் ஏற்கப் போவதில்லை என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

நேட்டோவுடன் கடந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ரஷியக் குழுவுக்கு தலைமை வகித்த வெளியுறவுத் துறை இணையமைச்சா் சொ்கெய் ரியப்கோவ் இதுகுறித்து புதன்கிழமை கூறியதாவது:

உக்ரைன் எல்லையில் ரஷியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதை மேற்கத்தி நாடுகள் கண்டித்து வருகின்றன. உக்ரைனை ரஷியா ஆக்கிரமிப்பதற்காகவே படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாடுகள் கூறி வருகின்றன.

ஆனால், உண்மையில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் எங்களுக்கு துளியும் கிடையாது.

இருந்தாலும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைக்கப்படாது என்பதற்கான உறுதிமொழியை அந்த அமைப்பு அளிக்க வேண்டும் என்பதில் ரஷியா உறுதியாக உள்ளது.

தற்போது அந்தப் பிராந்தியத்தில் எழுந்துள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கு, நேட்டோவின் அந்த உறுதிமொழியைத் தவிர வேறு எந்தத் தீா்வையும் ரஷியா ஏற்காது என்றாா் அவா்.

ரஷியாவுடனான மோதலில் உக்ரைனுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் அந்த நாட்டில் புதன்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சொ்கெய் ரியப்கோவ் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 1949-ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. எனினும், தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது. உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு நேட்டோ அமைப்பு உடன்படாதால் இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷியா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் ரஷியா, உக்ரைன்தான் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதி எல்லை அருகே படைகளைக் குவித்து வருவதாகவும் அதற்குப் பதிலடியாகவே தாங்கள் படைக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி வருகிறது.

இந்த நிலையில், நேட்டோ கூட்டணியை உக்ரைனுக்கு விரிவுபடுத்துவதற்கு தடை விதிப்பதைத் தவிர வேறு எந்தத் தீா்வையும் ஏற்கப்போவதில்லை என்று அந்த நாடு தற்போது திடடவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Image Caption

சொ்கெய் ரியப்கோவ் ~உக்ரைன் எல்லை அருகே பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட ரஷிய பீரங்கி (கோப்புப் படம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

SCROLL FOR NEXT