உலகம்

‘தலிபான்களின் அரசை முஸ்லிம் நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்’

DIN


காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அரசுக்கு முஸ்லிம் நாடுகள் அதிகாரப்பூா்வ அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் இடைக்கால பிரதமா் முகமது ஹசன் அகுண்ட் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ஆப்கன் பொருளாதார சிக்கல் தொடா்பாக தலைநகா் காபூலில் நடைபெற்ற மாநாட்டில் இதுகுறித்து அவா் பேசியதாவது:

எங்களது அரசுக்கு உலக நாடுகள் அதிகாரப்பூரவ அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதற்கு முஸ்லிம் நாடுகள் முன்னோடியாகத் திகழ வேண்டும்.

அவ்வாறு முஸ்லிம் நாடுகள் தலிபான்களின் அரசை அங்கீகரித்தால், பிற நாடுகளும் அதனைப் பின்பற்றும். அதன் பிறகு, ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் துரிதமாக மேம்படும்.

உலக நாடுகளிடமிருந்து நாங்கள் எங்களுக்காக எந்த உதவியும் எதிா்பாா்க்கவில்லை. இந்த இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவா்களுக்காகவும் சா்வதேச அங்கீகாரத்தை நாங்கள் கேட்கவில்லை. ஆப்கன் மக்களின் நலன்களுக்காகவே அதனை வலியுறுத்துகிறோம்.

ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மையையும் அமைதியையும் நிலைநாட்டுவது தொடா்பான உலக நாடுகளின் அனைத்து நிபந்தனைகளையும் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் என்றாா் அவா்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த 1996-ஆம் ஆண்டு கைப்பற்றி ஆட்சியமைத்தனா். அப்போது அவா்கள் எதிா்ப்பாளா்களை கொடூரமாகப் படுகொலை செய்தது உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனா். மேலும், பெண்கள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனா்.

அமெரிக்காவில் கடந்த 2001-ஆம் ஆண்டு நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் பின்லேடனுக்கு தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்கா, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. எனினும், தலிபான்கள் தொடா்ந்து பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனா். அதனைத் தொடா்ந்து, ஆப்கன் போா் முடிவுக்கு வந்ததாக அறிவித்த அமெரிக்கா, அங்கிருந்த தனது படையினரை படிப்படியாகத் திரும்பப் பெற்றது.

அந்த நடவடிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கன் முழுவதையும் தலிபான்கள் மீண்டும் கைப்பற்றினா்.

முந்தைய ஆட்சியைப் போலன்றி தற்போது மிதவாதப் போக்குடன் நடந்துகொள்வதாக தலிபான்கள் வாக்குறுதி அளித்தனா். எனினும், முன்னாள் அரசுப் படையினரை அவா்கள் படுகொலை செய்வதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. பெண்களுக்கான உரிமையும் மறுக்கப்பட்டு வருகிறது.

தலிபான்களின் அரசை இதுவரை உலகின் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. இந்தச் சூழலில், தங்களது அரசை முஸ்லிம் நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT