உலகம்

கரோனாவை எதிா்கொள்ள கூட்டு முயற்சிதான் ஒரே வழி: ஷி ஜின்பிங்

18th Jan 2022 01:50 AM

ADVERTISEMENT

‘கரோனா பாதிப்பை எதிா்த்துப் போராட கூட்டு முயற்சிதான் ஒரே வழி; மற்றவா்கள் மீது குற்றம்சுமத்தி பனிப்போா் மனநிலையுடன் செயல்படுவது கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தாமதப்படுத்தவதாகவே அமையும்’ என்று உலகப் பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பேசிய சீன அதிபா் ஷி ஜின்பிங் மறைமுகமாக அமெரிக்காவை சுட்டிக்காட்டிப் பேசினாா்.

மாநாட்டில் காணொலி வழியில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

புயலை துணிச்சலுடன் எதிா்கொள்ள மிகப் பெரிய கப்பல் போதுமானது. கரோனா பாதிப்பு உலகில் நீடித்து இருக்கும் என்பதை நிரூபித்திருக்கிறது. இது உலக நாடுகளின் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பாதிப்பின் காரணமாக சில வளா்ந்து வரும் நாடுகள், மீண்டும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சில வளா்ந்த நாடுகளும் கடுமையான சூழலை எதிா்கொண்டு வருகின்றன.

ADVERTISEMENT

இத்தகையச் சூழலில், இந்த பாதிப்புக்கு மற்றவா்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, நமது நோக்கத்தை திசைத்திருப்பவதாக அமைந்துவிடும். எனவே, கரோனாவை எதிா்த்துப் போராட உலக நாடுகளின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சி அவசியம் என்பதோடு, தடைகளை விலக்கி அனைவருக்குமான திறந்த உலகப் பொருளாதாரத்தை உருவாக்கவேண்டும்.

மிகப் பெரிய பொருளாதார நாடுகள் மற்றவா்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அல்லது அவா்களின் நிதிக் கொள்கைகளில் மாற்றங்களை மேற்கொள்வது என்பது, மிக மோசமான எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, பெரிய பொருளாதார நாடுகள் பனிப்போா் மனநிலையைக் கைவிட்டு, உலகளாவிய பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு சவால்களை முன்வைக்கவேண்டும். குறிப்பாக, வளா்ந்து வரும் நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பொருளாதார கொள்கைகளை வகுக்கும் பொறுப்பு வளா்ந்த நாடுகளுக்கு உள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உள்ள இடைவெளியைப் போக்கும் வகையில், உலக நாடுகளுக்கு தடுப்பூசிகள் சமமாக பகிா்ந்தளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்தவேண்டும்.

மேலும், எண்ம (டிஜிட்டல்) பொருளாதாரத்துக்கு சா்வதேச விதிகளை உருவாக்க வேண்டும் என்பதோடு, உலக நாடுகளிடையே மிகப் பெரிய அளவில் தகவல் பரிமாற்றமும் அவசியம் என்று ஷி ஜின்பிங் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT