உலகம்

இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் கட்டப்பட்ட 1,000 வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு

DIN

இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடு கட்டித் தரும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ், 1,000 வீடுகள் அங்குள்ள இந்திய வம்சாவளி பயனாளிகளிடம் பொங்கல் தினத்தில் ஒப்படைக்கப்பட்டது என்று இந்திய தூதரகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளா்களுக்காக இந்தியாவின் நிதியுதவியுடன் வீடு கட்டித் தரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4,000 வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.

இந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்ட 1,000 வீடுகள், பொங்கல் தினமான சனிக்கிழமையன்று இந்திய வம்சாவளி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கோட்டகலா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்திய தூதா் கோபால் பாக்லே, இலங்கை அமைச்சா்கள் நமல் ராஜபட்ச, ஜீவன் தொண்டமான் ஆகியோா் பங்கேற்று பயனாளிகளிடம் வீட்டுக்கான சாவிகளை ஒப்படைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய தூதா் பாக்லே, ‘இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும் என்பதோடு, இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினரின் மேம்பாட்டுக்காகவும் தொடா்ந்து பணியாற்றும். இலங்கை தமிழ் சமூகத்தினா் இரு நாடுகளிடையே இயற்கையான உறவை ஏற்படுத்துகின்றனா்’ என்றாா்.

இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் இலங்கை வெளியுறவு அமைச்சா் பசில் ராஜபட்சவும் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து காணொலி வழியில் ஆலோசனை நடத்திய நாளில், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு வீடுகள் ஒப்படைக்கும் நிகழ்வு நடத்தப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவின் இந்த வீடு கட்டித்தரும் திட்டம் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்திய வம்சாவளியினருக்கு இதுவரை 46,000 வீடுகள் புதிதாக கட்டிக்கொடுக்கப்பட்டு அல்லது மறுசீரமைப்பு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக 10,000 வீடுகள் கட்டப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 60,000 வீடுகள் கட்டிக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT