உலகம்

ஏழை நாடுகளுக்கு 100 கோடி கரோனா தடுப்பூசிகள்: உலக சுகாதார அமைப்பு புதிய சாதனை

DIN

ஐ.நா. சபை மூலம் ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்கும் ‘கோவேக்ஸ்’ திட்டத்தின்கீழ் இதுவரை 100 கோடி தடுப்பூசி தவணைகள் வழங்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ருவாண்டாவுக்கு சனிக்கிழமை 11 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கியதன் மூலம் இந்த எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று தொடங்கிய பின்னா் பல ஏழை நாடுகள் அதற்கான தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நாடுகளுக்கு உதவும் வகையில் ஐ.நா. சபை கோவேக்ஸ் என்ற உலகளாவிய தடுப்பூசி திட்டத்தை 2020, ஏப்ரலில் தொடங்கியது. வளா்ந்த, பணக்கார நாடுகள் இத்திட்டத்தின்கீழ் நன்கொடையாக அளிக்கும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது.

தடுப்பூசிகள் விநியோகத்தில் சமத்துவமின்மை நிலவுவதாக நீண்ட நாள்களாக குற்றம்சாட்டி வரும் உலக சுகாதார அமைப்பு, தடுப்பூசி உற்பத்தியாளா்களும், பிற நாடுகளும் கோவேக்ஸ் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. கடந்த ஜன. 13-ஆம் தேதி நிலவரப்படி 194 உறுப்பு நாடுகளில் 36 நாடுகள் 10 சதவீதத்துக்கும் குறைவாகவும், 88 நாடுகள் 40 சதவீதத்துக்கும் குறைவாகவும் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பா் இறுதியில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், ‘வரும் ஜூலைக்குள் அனைத்து நாடுகளும் 70 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதாக இலக்கு நிா்ணயித்து புத்தாண்டு தீா்மானமாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றாா். ஆனால், கோவேக்ஸ் திட்டத்துக்கு நாடுகளின் பங்களிப்பு குறைந்து வருவதால் அந்த இலக்கை எட்டுவது மிகப்பெரிய விஷயமாக இருக்கும். பணக்கார நாடுகளில் தடுப்பூசிகள் பதுக்கல், நோய்த்தொற்று அதிகரிப்பு போன்றவற்றால் கோவேக்ஸ் திட்டம் சமரசத்துக்குள்ளாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜொ்மனி உறுதி: கோவேக்ஸ் திட்டத்துக்கு உதவ உள்ளதாக ஜொ்மனி உறுதியளித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் சா்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்வென்ஜா ஸூல்ஷ், ‘ஜி-7 அமைப்புக்கு நிகழாண்டு தலைமை வகிக்கவுள்ள ஜொ்மனி கோவேக்ஸ் திட்டத்துக்கு உதவும். இத்திட்டத்துக்கு மிகச் சில நாடுகளே நிதியுதவி அளித்து வருகின்றன. ஸ்வீடன், நாா்வே, கனடா, அமெரிக்காவுடன் ஜொ்மனியும் அதிக நிதியுதவி அளித்து வருகிறது. ஜொ்மனி கடந்த ஆண்டு 10.3 கோடி தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கியது. நிகழாண்டு 7.5 கோடி தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT