இந்தியாவில் வரும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் நோய்வாய்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் போடப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பூஸ்டர் டோஸ் குறித்து பல முக்கியமான தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் பணிகளை முதலில் தொடங்கிய சில நாடுகளில் முக்கியமானது பிரிட்டன். அங்கு இதுவரை 2.8 கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ளத் தகுதியானவர்களில் 10இல் 7 பேருக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவலின் போது, பிரிட்டனில் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்தது. இருப்பினும், பூஸ்டர் டோஸ் தான் மருத்துவ உட்கட்டைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைத்தது.
பிரிட்டனில் கடந்த சில நாட்களாக, தினசரி பாதிப்பு 1.80 லட்சத்தை தாண்டியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஆனால், அவர்களில் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
வெறும் 11,452 பேர் மட்டுமே பிரிட்டனில் கரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி பணிகள் முழுமையாகத் தொடங்காத போது, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை 34 ஆயிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அன்னை தெரஸா அறக்கட்டளைவங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்
மேலும், புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் போரீஸ் ஜான்சன், "2022ஆம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஒரு ஆண்டாக அமைய வேண்டும் என்றால் அனைவரும் உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.
பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டவர்களில் 90% பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்படும் போதும் மருத்துவ உதவி தேவைப்படவில்லை. இது பூஸ்டர் டோஸின் முக்கியத்துவத்தைத் தெளிவாக உணர்த்துகிறது" என்றார்.
இதற்கு நேர்மாறாக, தடுப்பூசி போடாவர்கள் மத்தியில் கரோனா உயிரிழப்பு அதிகமாக உள்ளது. கிடைக்கப்பெற்ற தரவுகள், பூஸ்டர் டோஸ்கள் போட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு குறைவு என்பதையே காட்டுகிறது.