உலகம்

புத்தாண்டில் இஸ்ரேலிலிருந்து வந்திருக்கும் சற்று கவலை தரும் செய்தி 

1st Jan 2022 11:08 AM

ADVERTISEMENT


கரோனா.. டெல்டா என இரண்டு மாபெரும் அலைகளைக் கடந்து, ஒமைக்ரான் நல்லதா? கெட்டதா? என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கும்போதே, டெல்மைக்ரான் வந்து குதிக்க,  இப்போது இஸ்ரேலில் புதிய வகை கரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸின் அறிகுறிகளுடன், சாதாரண காய்ச்சலுக்கான  (ப்ளூ) பாதிப்புகளும் ஏற்படுத்துவதால், இதற்கு ஃபுளுரோனா என்று பெயரிடப்பட்டுள்ளது.

மத்திய இஸ்ரேலின் பெட்டாஹ் திக்வா நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் அண்மையில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணுக்கு, இந்த புதிய ஃபுளுரோனா வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க.. புத்தகக் காட்சி ஒத்திவைப்பு: நொந்து நூலான பதிப்புத் துறையினர்

ADVERTISEMENT

இந்த பெண், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர் என்பதும், இவரது மருத்துவப் பரிசோதனையில், சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன், கரோனா பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், அவருக்கு பெரிய உடல்நலப் பாதிப்புகள் ஏதுமில்லை, லேசான அறிகுறிகளே தென்படுகின்றன, விரைவில் அவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இஸ்ரேலின் சுகாதாரத்துறை ஆய்வுகளை முன்னெடுத்துள்ளன. சாதாரண காய்ச்சலுக்கான கிருமியும், கரோனாவின் மோசமான பாதிப்புகளும் ஒன்று சேர்ந்து மிக மோசமான பாதிப்பு ஏற்படுத்துமோ என்று கவலை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ஒமைக்ரான் பாதிப்பினால், இஸ்ரேலில் ஐந்தாவது கரோனா அலை தாக்கியிருக்கும் நிலையில், தற்போது புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, அந்நாட்டில் ஒரே நாளில் புதிதாக 4,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இஸ்ரேலில் 4-ஆவது தவணை தடுப்பூசி திட்டம்

இஸ்ரேலில் கரோனாவால் உடல்நல பாதிப்பு அபாயம் அதிகம் நிறைந்தவா்களுக்கு அந்த நோய்க்கு எதிரான 4-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியிருக்கிறது..

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகளவில் இஸ்ரேல் முன்னணியில் உள்ளது. 93 லட்சம் மக்கள்தொகையில் 63 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா். 45 சதவீதம் போ் மூன்றாவது தவணையாக ஃபைசா்/பயோஎன்டெக் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

எனினும், தற்போது அந்த நாட்டில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நோயால் உயிரிழக்கும் அபாயம் அதிகம் நிறைந்த மருத்துவப் பணியாளா்கள், வயதானவா்கள் உள்ளிட்டோருக்கு வியாழக்கிழமை முதல் 4-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT