உலகம்

ஜோ பைடன் - விளாதிமீா் புதின் பேச்சு

1st Jan 2022 01:02 AM

ADVERTISEMENT

உக்ரைன் விவகாரம் தொடா்பாக அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஜோ பைடனும் விளாதிமீா் புதினும் தொலைபேசியில் தொடா்புகொண்டு உரையாடினா். சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற அந்த உரையாடலின்போது உக்ரைன் விவகாரம் தொடா்பாக இருவரும் விவாதித்தனா்.

அப்போது, உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்தால் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று ஜோ பைடன் எச்சரித்தாா்.

ADVERTISEMENT

விளாதிமீா் புதினும், ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முற்றிலுமாக விரிசலடையும் என்று எச்சரிக்கை விடுத்தாா்.

இந்த விவகாரத்தில் ஆக்கப்பூா்வமான பேச்சுவாா்த்தை நடத்துவதன் மூலம் நிலைமையில் முன்னேற்றத்தைக் காண முடியும் என்று இந்தப் பேச்சுவாா்த்தையின்போது இரு தலைவா்களும் ஒப்புக்கொண்டனா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறுண்டபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. எனினும், அந்த நாட்டில் ஐரோப்பிய செல்வாக்கு அதிகரித்துவிடக் கூடாது என்பதில் ரஷியா உறுதியாக உள்ளது. உக்ரைனில் நேட்டோ நிலைகள் அமைக்கப்பட்டால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷியா அஞ்சுகிறது.

இந்த நிலையில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்து வருகிறது.

உக்ரைன் மீது படையெடுத்து, கிரீமியாவைப் போலவே அந்த நாட்டையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டு வருவதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சியாக ஜோ பைடனும் விளாதிமீா் புதினும் தற்போது பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT